சஜித் – ரணில் கூட்டு?

0
138

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியையும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஈடுபட்டுவரும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவது ஆச்சரியமானதல்ல – எனினும், சஜித் பிரேமதாச இது தொடர்பில் சாதாகமான பதிலை இதுவரையில் வழங்கவில்லை.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் ஒன்றுதான் ரணிலையும் சஜித்தையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சி.
இது ஒருபுறம் என்றால், மறுபுறும் பசில் ராஜபக்சவின் தலைமையில் பிறிதொரு நகர்வு முன்னெடு;க்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவை, ஒரு வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகள் பல்வேறு வழிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி மோசமான பின்னடைவு நிலையில் இருக்கின்றது.
அதனை தூக்கி நிறுத்துவது இலகுவான காரியமாகவும் தெரியவில்லை – தவிர, அவ்வாறான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்கவும் ஈடுபடுவதாக தெரியவில்லை.
ஒருவேளை அவருக்கு விசுவாசமானவர்கள் ஈடுபடலாம்.
ஆனால் பொருளாதார நெருக்கடி ரணில் விக்கிரமசிங்கவை பலமானதொரு நபராக மாற்றியிருக்கின்றது.
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான ஜன வசியத்தை ஓரளவு பெற்றிருக்கின்றார்.
இந்த ஜன வசியம் என்பது ரணிலின் மீதானது என்பதல்ல – மாறாக, குறிப்பிட்ட சூழலானது, அவ்வாறானதொரு அபிப்பிராயத்த ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏனெனில் ரணில் என்னதான் ஆற்றலுள்ளவராக இருந்தாலும் கூட, அவரை பெரும்பான்மையான சாதாரண சிங்கள மக்கள் தங்களுக்குரியவராக
நோக்கவில்லை.
இதன் காரணமாகத்தான் கடந்த காலங்களில் ஆற்றலுள்ள ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைய நேரிட்டது.
2005இல், தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை ரணில் பெற்றிருந்தாலும் கூட, விடுதலைப் புலிகளின் தேர்தல் பகிஷ்கரிப்பால், அது கைகூடவில்லை.
ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைந்துவிடுவார் என்னுமடிப்படையில்தான், 2009இற்கு பின்னர் இடம்பெற்ற எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் அவர் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை.
அவர் மற்றவர்களுக்கே ஆதரவு வழங்கினார்.
ஏனெனில் 2009இற்கு பின்னரான யுத்த வெற்றிவாத ஜன வசியத்தை உடைக்கக் கூடிய ஒரு சிங்களத் தலைவராக ரணில் இருக்கவில்லை.
அரசியல் அனுபவத்தில் ஆற்றலில், சர்வேதேச தொடர்புகளில் ரணிலுக்கு அருகில் கூட நிற்க முடியாதவர்கள்தான் ஜனாதிபதி கதிரையை அலங்கரித்தனர்.
ஆனால் பொருளாதார நெருக்கடி யுத்த வெற்றிவாத நாயகர்களை பெருமளவில் வீழ்ச்சியுறச் செய்திருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழலில் யுத்த வெற்றிவாதம் அடுத்த தேர்தலில் பிரதான விடயமாக இருக்காது, இருக்கவும் முடியாது.
இப்போது பொருளாதார வெற்றிக்கு உரிமை கோரும் அரசியலே தென்பகுதியை ஆட்கொள்ளப் போகின்றது.
இவ்வாறானதொரு சூழலில்தான், ரணில் விக்கிரமசிங்க தனித்துத் தெரிகின்றார்.
நெருக்கடியான காலகட்டமொன்றை தாண்டுவதற்கு தலைமை தாங்கியவர் என்னும் வகையில் அவர் தொடர்ந்தும் கதிரையில் இருக்க வேண்டிய தேவையிருப்பதாக
சிங்களவர்களும் சிந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
நிலைமைகள் இவ்வாறிருந்த போதும், ரணிலின் வெற்றிக்கு பலமானதொரு அரசியல் கூட்டணி தேவை.
ஏனெனில் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதியாக இருப்பதன் மூலம் ரணிலால் விடயங்களை முன்னெடுக்க முடியாது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், ரணிலை சுற்றி பலமானதொரு சுவரை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.
ஆனால் சஜித் பிரேமதாச இதற்கு இணங்குவாரா என்பதில் சந்தேகங்கள் உண்டு.
அவருக்கும் ஜனாதிபதி கனவுண்டு.
இந்த நிலையில் ரணிலுடன் கூட்டுச் சேர்ந்தால் தனது நகர்வுகள் சீர்குலைந்துவிடுமென்று அவர் எண்ணக் கூடும்.
ஆனால் சஜித்தால் தனித்து ஜனாதிபதியாகுவதற்கான வாய்புக்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.
எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்வைத்தே அனைத்தும் நகரப்போகின்றது.