தமிழக சட்டப் பேரவையிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டிருக்கிறார்.
சட்டப்பேரவை தொடங்கியதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பினர். அத்துடன் இன்றும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய கருப்பு வண்ண உடையில் வருகை தந்திருந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
‘கேள்வி நேரத்திற்குப் பிறகு அனுமதி தருகிறேன்’ என அவை தலைவர் அப்பாவு கூறிய பிறகும், தொடர்ந்து அதிமுகவினர் அவர்களுடைய இருக்கையின் அமராமல் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன், ”அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் ” செய்வதற்கான தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களும் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைகளில் இருந்து நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதன் போது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியதாவது…
” கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறுபதை கடந்திருக்கிறது. நாள்தோறும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றும் மருத்துவமனைகளில் 180 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கு கண் பார்வை தெரியவில்லை. இந்த சூழலில் இதை விட முக்கியமானதாக என்ன பிரச்சனை இருக்கிறது? இது மக்களின் பிரச்சனை மக்களின் உயிர் பிரச்சனை. மக்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்புவதற்கு குரல் கொடுத்தால்.. அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றுகிறார்கள். இது வேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மக்களுடைய பிரச்சனையை அணுகவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கத்தான் பார்க்கிறது. இன்று நாடே பதறுகிறது. கள்ளக்குறிச்சியில் பலர் இறந்து அவர்களது குடும்பம் அனாதையாக இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த முன் வரவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து என்ன பயன்? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் எப்படி பாடுபட முடியும்? ” என்றார்.