26.5 C
Colombo
Friday, November 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்ற, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் தீர்மானம்

சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்ற, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பூநகரி பிரதேச சபை அமர்வு, இன்று காலை, தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. கடலட்டை பண்ணைகள் தொடர்பான தீர்மானத்தை, தவிசாளர் தனது தனிப் பிரேரணையாகக் கொண்டுவந்து, பிரேரணையை வாசித்து, ஏகமனதாக நிறைவேற்றுமாறு, சபையை கேட்டுக்கொண்டார். பூநகரியின் மேற்கு கடலின் பெரும்பாலான பகுதிகளில், கடலட்டை பண்ணைகள் வழங்கப்படுகிறது. இங்குள்ளவர்களுக்கு, யார் என்று தெரியாதவர்களுக்கு, ஏக்கர் கணக்கில் வழங்கப்படுகிறது. சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது. இதனால், பாரம்பரிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், பத்திரிகை விளம்பரம் ஒன்று, தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில், அட்டைப்பண்ணை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், எமது கடல் நிலத்தையும் கைவிட வேண்டிய நிலை வரும். எனவே, பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருந்ததுடன், தொடர்ந்து, பிரேரணையை வாசித்தார். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களாகிய நாம், எங்களுக்கான காணி உரிமைக்காக பேராடிக்கொண்டிருக்கும் வேளையில், சத்தமில்லாது, எங்களின் கடலில் மேற்கொள்ளப்படும் பாரிய சவாலை காணமுடிகிறது. சந்ததிகளாக, வாழ்வாதாரத்திற்கு கடலை மட்டும் நம்பியிருக்கும் மக்களை, கடலில் இருந்து அந்நியப்படுத்தி, எங்கள் கடலை, கடலட்டை பண்ணை என்ற போர்வையில், சீனாவுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் தாரை வார்க்கும் சதியை, பூநகரி பிரதேச சபை வன்மையாக கண்டிக்கிறது.
வடக்கில் எந்தவித ஒழுங்கும் இல்லாத கடலட்டை பண்ணைக்கு எதிராக, அனைவரும் போராடி வரும் வேளையில், ஆயிரக்கக்கான ஏக்கரில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு விலைமனு கோரல் விடுக்கப்பட்டிருக்கிறது. கடலட்டை பண்ணைகளின், தீமை பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, முடிவு வரும் வரையும், சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு, அரசாங்கத்தை கோருகின்றோம். என தவிசாளர் குறிப்பிட்டார். தொடர்ந்து, பிரேரணை தொடர்பாக, உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.
ஈழ மக்கள் ஐனநாயக் கட்சி உறுப்பினர் கருத்து வெளியிடுகையில், அமைச்சர், எங்களுடைய மக்களை தான் செய்யுமாறு கோரியுள்ளார் என்றார். ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் கருத்து வெளியிடுகையில், சட்டரீதியாக, பிரதேச செயலக அனுமதியோடு தான் மேற்கொள்ளப்படுகிறது எனவும், கடலட்டை நாட்டின் அந்நிய செலவானியை ஈட்டுகிறது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இரண்டு உறுப்பினர்கள், தீர்மானத்திற்கு எதிராக காணப்பட்ட நிலையில், ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 20 உறுப்பினர்களைக் கொண்ட பூநகரி பிரதேச சபையில், 11 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 4 பேர் சுயேட்டை குழுவையும், 2 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஒருவர் ஈழ மக்கள் ஐனநாயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், இன்றைய சபை அமர்வுக்கு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சார்ந்த ஒருவர், சமூகம் அளிக்கவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles