சட்டவிரோத மீன்பிடியை இந்தியா தடுக்க வேண்டும்! – அமைச்சர் பிமல்

0
20

வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின் விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு  மற்றும்  சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு  மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவான மீனவர்கள் உள்ளார்கள். அத்துடன்  மீன்பிடி மற்றும் அதனுடனான தொழில்களில் அதிகளவானோர் ஈடுபடுகிறார்கள். வடக்கு பகுதியில் வாழும் மீனவர்கள் கஷ்டமான வாழ்க்கை முறைமையில் தான் உள்ளார்கள். கடற்றொழிலை மேம்படுத்துவதை போன்று அந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் அதற்கான பொறுப்பு கடற்றொழில் வளங்கள் அமைச்சுக்கு உண்டு.

வரவு – செலவுத் திட்டத்தில்  வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் அதனுடான  இணை கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. வடக்கில் அதிகளவான  கடற்றொழிலுடன் தொடர்புடைய வளங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் தெற்கில் உள்ள மீனவர்களை காட்டிலும் வடக்கில் உள்ள மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் கஸ்டப்படுகிறார்கள்.

இந்திய மத்திய அரசிடமும், தமிழ்நாடு  அரசிடமும்  விசேட கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் இலங்கையர்கள் படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் போது   அவுஸ்திரேலிய அரசாங்கம் ‘ படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு  வர வேண்டாம்’ என்று  பல விளம்பரங்களை அழுத்தமாக வெளியிட்டது. அத்துடன் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.

மீன்பிடி கைத்தொழிலை தவிர்த்து வடக்கு மக்களுக்கு வேறு  எந்த கைத்தொழில்களும் கிடையாது. வடக்கு மக்களின் ஒரே ஜீவனோபாயத்தை இல்லாதொழிக்க  இடமளிக்க வேண்டாம் என்று  இந்திய அரசிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள சட்டங்களை செயற்படுத்துங்கள்.  இவற்றை செயற்படுத்தாமல் வடக்கு மக்களின் நலன்புரி பற்றி பேச முடியாது.

இதன்போது எழுந்து உரையாற்றிய  தமிழ் முற்போக்கு  கூட்டடணியின் தலைவர் மனோ கணேசன்,  உங்களின் கருத்து மிகவும் முக்கியமானது, இந்திய பிரதமர்  எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். ஆகவே  தயவு செய்து பேச்சுவார்த்தையில்  ஒழுங்கில் இந்த விடயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

வடக்கு மக்களுக்கு இது பாரியதொரு பிரச்சினை. எமது சொத்துக்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள். யுத்தம் முடிந்து 15  வருடங்கள் ஆகி விட்டது.இந்தியா உதவி செய்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள்  நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய  பிமல் ரத்நாயக்க, இது பாரதூரமான பிரச்சினை. அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்தினால் நிறுத்த முடியும். இந்திய அரசாங்கம்  இலங்கைக்கு  பல உதவிகளை செய்கிறது.  வடக்கு மக்களின்  இந்த பிரச்சினைக்கு  தீர்வு காணாமல்  வழங்கும் உதவிகள் உண்மையானதாக அமையாது.

இந்திய மீனவர்களின்  எல்லை மீறல் செயற்பாடு நாளாந்த பிரச்சினையாகவே காணப்படுகிறது. இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்க வேண்டும். இந்திய அரசாங்கம் இந்த  பிரச்சினைக்கு  உடன் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.