சம்பந்தனின் அரசியல் ‘முதிர்ச்சி’

0
328

இரண்டு பௌத்த மத பீடங்கள், 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்திருக்கின்றன. அதே வேளை, கத்தோலிக்க ஆயர் பேரவையும் 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இதனை வரவேற்றிருக்கின்றார். அத்துடன், இதனை எதிர்க்கும் பௌத்த மதபீடங்களும் கத்தோலிக்க ஆயர் பேரவையும் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்காகவும் குரல் கொடுக்க வேண்டுமென்று சம்பந்தன் கோரியிருக்கின்றார்.

கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற காலம் முழுவதும் ஒரு அரசியல் யாப்பிற்கான கதையுடன் முடிவுற்றிருந்தது. எத்தனையோ விடயங்கள் இடம்பெற்றன. மக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகள், இடைக்கால அறிக்கை, உப குழுக்களின் அறிக்கை – என பல விடயங்கள் இடம்பெற்றன. ஆனால் இறுதியில் அனைத்துமே புஸ்வாணமாகியது. ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றம் மீ;ண்டும், அவர்களை முன்னரைவிடவும் பலமானவர்களாக எழுச்சியுறச் செய்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் நாட்டை முன்னைய நிலைக்கு கொண்டு செல்வதில் அவர்கள் தங்களை ஈடுபடுத்தியிருக்கின்றனர். இதன்போதான சில, உள் முரண்பாடுகளினால்தான் 20வது திருத்தச்சட்டம் இன்று பேசுபொருளாகியிருக்கின்றது. இதனை பௌத்த மதபீடங்களில் இரண்டு எதிர்த்திருப்பது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அல்ல. அதே வேளை கத்தோலிக்க ஆயர் பேரவையும் இதனை தமிழ் மக்களுக்காக எதிர்க்கவில்லை. கர்தினால் மெல்கத் ரஞ்சித் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரும் அல்ல. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினையிருக்கின்றது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை காண வேண்டியது அவசியம் என்னும் நிலைப்பாட்டை பௌத்த மதபீடங்கள் எந்தக் காலத்திலுமே ஆதரித்ததில்லை. இந்த நிலையில் சம்பந்தன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் பௌத்த மதபீடங்கள் புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கூறுகின்றார். பௌத்த மதபீடங்களிடம் புதிய அரசியல் யாப்பிற்கான ஆதரவை கோரும் சம்பந்தன், அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பதையும் கைவிடுமாறு பௌத்த மதபீடங்களை கோருவாரா?

பொதுவாக சம்பந்தனை அரசியலில் பழுத்தவர் என்று சொல்வதுண்டு. ஆனால் அவரின் பழுத்த அனுபவம் இதுவரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படவில்லை. ரணில் என்னும் ஒரு தனிநபரை நம்பி, ஜந்து வருடங்களை அவர் வீணாக்கினார். ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஆதவளித்தார். மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணிலுக்கும் இடையில் அதிகாரப் போட்டியுருவான போது, ரணிலுக்கு ஆதரவாக வழக்காடினார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லாமல் போனது. இப்போது மீண்டும் ராஜபக்சக்களின் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றது. ஒரு வேளை அவ்வாறானதொரு யாப்பை அவர்கள் கொண்டுவரக் கூடும். ஆனால் அப்படியொரு யாப்பு வந்தாலும் கூட, அது நிச்சயமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளை பூர்தி செய்வதற்கான அரசியல் யாப்பாக ஒரு போதுமே இருக்கப் போவதில்லை.
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அரசியல் யாப்பை சிங்கள அரசாங்கங்கள் ஒரு போதுமே கொண்டுவரப் போவதில்லை. ஒரு வேளை அப்படியொரு அரசியல் யாப்பை கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்தாலும் கூட, அதனை சிங்கள பௌத்த மதபீடங்கள் ஒரு போதுமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மதபீடங்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை சிங்கள பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுதான் இந்த தீவின் அரசியல் யதார்த்தம். இன்று அரசியல் யாப்பிலிருக்கும் 13வது திருத்தச்சட்டம் இந்தியாவின் பலத்தை பிரயோகித்து திணிக்கப்பட்ட ஒன்று. இதனால்தான் அதனை எப்படியாவது அகற்ற வேண்டுமென்பதில் சிங்கள பௌத்த மதபீடங்களும், சிங்கள தேசியவாத அமைப்புக்களும் அவ்வப்போது ஒற்றைக்காலில் நிற்கின்றன.

இந்த விடயங்களை சம்பந்தனால் விளங்கிக்கொள்ள முடியவில்லையா – அதுவும் பழுத்த – முதிர்ச்சிமிக்க ஒரு அரசியல் தலைவரால்!
-ஆசிரியர்