25 C
Colombo
Wednesday, September 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சம்பந்தன் எந்த இலக்கு பற்றி பேசுகின்றார்?

சம்பந்தனின் அரசியல் வாழ்வு பெரும்பாலும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கின்றது. ஆனாலும் இப்போதுகூட, சம்பந்தன் தனக்கு பின்னர் சரியானதோர் அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டுமென்னும் நோக்கில் ஆக்கபூர்வமான காரியங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. வழமையாக பேசும் விடயங்களையே, எந்தவொரு தூரநோக்குமின்றி பேசிவருகின்றார்.

தமிழரசு கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் ஸ்தாபகரான, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 44ஆவது நினைவு தினம் வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சியினரால் நினைவு கொள்ளப்பட்டிருக்கின்றது. திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகின்றபோது, எமது இலக்கை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே நாம் வெற்றிபெற முடியும். 1949ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியை தந்தை செல்வா ஆரம்பித்திருந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை, கடந்த 70 வருடங்களாக நாம் அவரது கொள்கைக்கு அமைவாகவே பயணித்து வருகின்றோம் – என சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். உண்மையில், சம்பந்தன் எந்த இலக்கு தொடர்பில் பேசுகின்றார்? செல்வநாயகத்தின் எந்தக் கொள்கைபற்றி பேசுகின்றார்?

இதேவேளை, செல்வநாயகத்தினால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்போதைய செயலாளர் நாயகமான வீ. ஆனந்தசங்கரி, செல்வாவின் கொள்கையை பலரும் வியாபாரமாக்குகின்றனர் என தெரிவித்திருத்திருக்கின்றார்.

எஸ். ஜே. வி. செல்வநாயகம் உருவாக்கிய ஒரு கட்சியான தமிழரசு கட்சி ஒரு பக்கமும், அவர் உருவாக்கிய பிறிதொரு கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி பிறிதொரு பக்கமாகவும் இருப்பது செல்வநாயகத்தின் கொள்கைக்கு சரியானதா? இதுபற்றி எந்தவொரு தமிழரசு கட்சியின் தலைவராவது சிந்தித்ததுண்டா?
தமிழ்த் தேசிய அரசியலை பொறுத்தவரையில், செல்வநாயகம் அவரது காலத்தின் தலைமுறைகள்மீது செல்வாக்குச் செலுத்திய ஒருவர்தான்.

ஆரம்பத்தில் தனிநாட்டு தீர்வை ஆதரிக்காத செல்வநாயகம், 1970களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால், தனிநாட்டுக்கான தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்கு கீழிறங்கினார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில், அவர் உடல், மனரீதியில் ஆரோக்கியமான ஒருவராக இருந்திருக்கவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு இடம்பெற்ற 1977 பொதுத் தேர்தலிற்கு முன்னதாகவே செல்வநாயகம் இறந்துவிட்டார்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் தனிநாட்டுக்கான ஆணையை வழங்கிவிட்டதாகவே கணிப்பிடப்பட்டது. ஆனால், தனிநாட்டுக்கான ஆணையை கோரிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், 1981இல் மாவட்ட அபிவிருத்தி சபையை ஆதரித்தனர். இந்த இடத்திலேயே செல்வநாயகத்தின் கொள்கை செத்துவிட்டது. ஏனெனில், செல்வநாயகத்திற்கு பின்னர் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்ட, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக்கான கொள்கையின் வழியில் பயணிக்கவில்லை. இதில் சம்பந்தன் பிரதானமானவர்.

1949இல், இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய செல்வாநாயகத்தின் கொள்கை சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வாகவே இருந்தது. இதனால்தான் தமிழரசு கட்சி, ஆங்கிலத்தில் சமஷ்டி கட்சியென அழைக்கப்பட்டது. ஆனால், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியபோது, செல்வநாயகத்தின் கொள்கை தனிநாடாக உருமாறியது.


அவ்வாறாயின், 70 வருடங்களாக, நாங்கள் செல்வாவின் கொள்கைக்கு அமைவாகவே பயணித்துவருகின்றோம் – நாங்கள் எங்களின் இலக்கில் உறுதியாக இருக்கவேண்டும் – என்று, இப்போது சம்பந்தன் கூறுவதன் பொருள் என்ன? எந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக சம்பந்தன் கூறமுற்படுகின்றார்? தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவதை விடுத்து, அவர்களுக்கு முன்னால், ஆக்கபூர்வமான விடயங்களை முன்வைப்பது தொடர்பிலேயே தமிழ் தலைமைகள் சிந்திக்கவேண்டும். அல்லாவிட்டால், இதுதொடர்பில் மக்கள் சிந்திக்க முற்படவேண்டும்!

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles