சம்பியனான தம்புளைக்கு 50 இலட்சம் ரூபா, காலிக்கு 25 இலட்சம் ரூபா ; ரமேஷ் மெண்டிஸ் தொடர் நாயகன்

0
166

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் 4 நாள் கிரிக்கெட் போட்டியில் தம்புளை அணி சம்பியன்  கிண்ணத்தை சுவீகரித்து 50 இலட்சம் ரூபா பணப்பரிசையும் தனதாக்கிக்கொண்டது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்ற இறுதிப் போட்டியில் காலி அணியை 75 ஓட்டங்களால் தம்புளை அணி வெற்றிகொண்டு சம்பியனானது.

இரண்டாம் இடத்தைப் பெற்ற காலி அணிக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைத்தது.

இப் போட்டியில் 258 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தம்புளை சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவரும் தேசிய வீரருமான துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்று 2 இணைப்பாட்டங்களில் பங்காற்றிய போதிலும் காலி அணியினால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனது.

பெத்தும் குமாரவுடன் 6ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன் கவிஷ்க அஞ்சுலவுடன் 8ஆவது விக்கெட்டில் மேலும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 5 விக்கெட்களையும் லஹிரு குமார 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் தம்புளை முதல் இன்னிங்ஸில் பெற்ற 248 ஓட்டங்களே அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

சுற்றுப் போட்டியில் தொடர்நாயகனாக காலி அணித் தலைவர் ரமேஷ் மெண்டிஸ் தெரிவாகி 5 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றெடுத்தார்.