நாட்டில் காணப்படுகின்ற முற்போக்கான அரசியல் கட்சிகளை இணைத்து புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைத்து, அதன் ஊடாக ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத்தலைவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 63 ஆவது நினைவு தினம் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு முற்போக்கான கட்சிகளை இணைத்துக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். அந்த கூட்டணியின் ஊடாக மக்கள் சார்பான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். அதியுயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்தியவர்களிடமே அதற்கான காரணத்தையும் கேட்க வேண்டும். இவை சிறந்த விடயங்கள் அல்ல. இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடும் போது மக்களின் எழுச்சியும் அதிகரிக்கும். இன்று காணப்படும் பிரச்சினைகள் எனது ஆட்சி காலத்தில் இருக்கவில்லை. எம்மால் பரிந்துரைக்கப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான அறிகுறி எங்கும் தென்படவில்லை. அது தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகின்றோம். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவும், சிறிமாவோ பண்டாரநாயக்கவும் முற்போக்கான கட்சிகளை இணைத்துக் கொண்டே கூட்டணியை அமைத்தனர். அந்த கொள்கையே எமக்குள்ளும் காணப்படுகிறது. நாம் முதலாவதாக தேசிய பேரவையை அமைத்து அதன் பின்னரே ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறினோம். ஆனால் இவர்கள் அதற்கு முரணாக இறுதியாகவே தேசிய சபையை அமைத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் எவ்வாறு அதில் இணைவது? எவ்வாறிருப்பினும் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்கள் எடுக்கப்படின் எம்மால் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.