சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியை தக்க வைப்பதற்கு முயற்சி: ஓமல்பே சோபித தேரர்

0
319

சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியை தக்க வைப்பதற்கு, தற்போதைய ஜனாதிபதி முயற்சித்து வருவதாகவும் சிறந்த ஆட்சியாளரை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடிக்கு தீர்வாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

எனினும் அவ்வாறான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு தற்போது ஆட்சிய அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருக்கும் அரசாங்கம் தயாராக இல்லை.

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக வாருங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல கட்சிகளுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றார். அதனுடன் அரசாங்கத்துக்கு எதிராக போராடிய ஒவ்வொரு குழுக்களையும் ஒடுக்கும் செயற்பாடுகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார்.

எனவே சர்வகட்சி அரசாங்கம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதற்காக இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றே கேட்கவிளைகின்றோம்.

மக்கள் வீதிக்கு வந்து ரணில் விக்கிரமசிஙக வேண்டும் என்று கோரவில்லை.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே சர்வகட்சி அரசாங்கம் என்ற விடயத்தை தனக்கு சாதாகமாக பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சில் தற்போதைய ஜனாதிபதி ஈடுபட்டு வருகின்றார்.

தற்போது கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை அரசியல் அமைப்புக்கு அமைவாக தக்கவைத்துக்கொள்ளவே அவர் பார்க்கின்றார்.

எனவே சிறந்த ஆட்சியாளரை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்குமாறே நாம் இந்த அரசாங்கத்தை கோரிகின்றோம் என்றார்.