கிளிநொச்சி

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால், கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
சர்வதேச மனித உரிமைகள் தினமாக இன்றைய தினம், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் உறவினர்களால் கையளிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த இரண்டாயிரத்து 485 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.




கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவில் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா, எங்கே எங்கே உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், சர்வதேச மனித உரிமைகள் நாள் எமக்கு துக்க நாள் உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பி உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.