சர்வதேச அழுத்தங்கள் நீர்த்துப் போய்விடுமா?

0
136

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்னையை தீர்க்கப் போவதாகக் கூறுவது ஒரு சதிமுயற்சி – இதன் தீய திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் வலைக்குள் சிக்கப்போகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் பேச்சில் ஈடுபடுவது அடிப்படையிலேயே தவறானது.
இதன் மூலம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் நீர்த்துப்போய்விடும்.
இவ்வாறு சிலர் வாதிட முயற்சிப்பதைக் காண முடிகின்றது.
ரணிலால் இலங்கையின்மீதான மனித உரிமைகள் அழுத்தங்களை நீர்த்துப்போகச் செய்ய முடியுமா? அந்தளவுக்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு பலமான நபரா? ரணில் விக்கிரமசிங்க மூன்றாம் உலக நாடொன்றின் ஜனாதிபதி.
அதிலும் இன்றைய நிலையில், வெளியாரிடம் கையேந்தி நிற்கும் ஒரு நாட்டின் தலைவர்.
வெளியாரின் உதவியில்லாது போனால் இலங்கையை அவரால் மீட்க முடியாது.
எனவே, இவ்வாறான ஒருவரால் மேற்குலக நாடுகளால் முன்னெடுக்கப்படும் அழுத்தங்களை எவ்வாறு பலவீனப்படுத்த முடியும்? அமெரிக்காவின் அழுத்தங்களை ஒரு சாதாரண ரணில் விக்கிரமசிங்கவால் திசைதிருப்ப முடியுமா? உண்மையிலேயே மேற்குலக நாடுகள் – குறிப்பாக இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் மென்மையான அழுத்தங்களை பிரயோகித்துவரும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை – முக்கியமாக, அமெரிக்கா இலங்கையின் மீதான பிடியை இறுக்க வேண்டுமென்று எண்ணினால் அதனை எவராலும் தடுக்க முடியாது.
ஏன் இந்தியாவால்கூட முடியாது.
இதுதான் உண்மை.
ஒருவேளை ரணிலால் ஜெனிவாவை மடைமாற்ற முடியுமென்றால் அதற்கு ரணிலின் திறமையல்ல, காரணம் – மாறாக ரணில் போன்ற ஒரு சிறிய – வறிய நாட்டின் ஜனாதிபதியால்கூட பலவீனப்படுத்தப்படக் கூடியளவுக்கா ஜெனிவா பலவீனமாக இருக்கின்றது.
எனவே, ரணிலால் விடயங்கள் மடைமாற்றப்படுகின்றது என்றால், அதற்கு கூட்டமைப்பை குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை.
குற்றஞ்சாட்ட வேண்டு மென்றால் இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களில் ஆர்வம் காண்பிக்கும் மேற்குலக நாடுகளைத்தான் குற்றம்சாட்ட வேண்டும்.
ஆனால், அவ்வாறு குற்றம்சாட்டுவதிலும் பயனில்லை.
ஏனெனில், எந்தவொரு நாடும் பிறிதொரு நாட்டின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும்போது, குறித்த நாட்டை முற்றிலும் தனிமைப்படுத்தாத வகையில்தான் அழுத்தங்களை பிரயோகிக்கும்.
இலங்கையின்மீது மனித உரிமைகள் சார்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவரும் நாடுகள் அனைத்துமே மறுபக்கத்தில் கொழும்புடன் நல்லுறவை பேணிவருகின்றது.
இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளை பேணிவருகின்றது.
இந்த பின்புலத்திலிருந்துதான் விடயங்களை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
அரசாங்கத்துடன் பேச்சுக்கு சென்றால், அதனைப் பயன்படுத்தி ஜெனிவாவை பலவீனப்படுத்தி விடுவார்கள் என்பது தவறானதொரு புரிதலாகும்.
ஜெனிவாவை ரணில் விக்கிரமசிங்கவாலோ இலங்கையின் வெளிவிவகார அமைச்சாலோ ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது.
2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் கீழிறங்கியதான ஒரு பார்வையுண்டு.
அவ்வாறான பார்வையில் தவறில்லை.
ஆனால், அதற்கு அப்போதிருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீரவின் கெட்டித்தனம் காரணமல்ல.
மாறாக, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்குலக நாடுகளுடன் மோதும் நிலைப்பாட்டை எடுத்தமையால் மேற்குலகின் அழுத்தங்களும் சற்று காரமாக வெளிப்பட்டது.
ஆனால், ரணில் அரசாங்கம் அவ்வாறு முரண்படவில்லை.
தாம் ஒத்துழைப்பதாக அறிவித்தது.
ஒரு நாடு விடயங்களில் ஒத்துழைப்பதாக அறிவித்த பின்னர், அந்த நாட்டின் உள்நாட்டு அணுகுமுறைகளில் நம்பிக்கையில்லை என்று எந்தவொரு நாடும் கூறப்போவதில்லை.
இப்போதும் அதுதான் நடக்கின்றது.
ஜனாதிபதி ரணில் பிரச்னைகளை தீர்க்கப் போவதாகக் கூறுகின்றார்.
அதற்காக பேசவருமாறு தமிழ் கட்சிகளை அழைக்கின்றார்.
இல்லை – நாங்கள் பேச்சில் பங்குகொள்ளமாட்டோம் என்றால் அது யாருக்கு சாதகமானது? தமிழர் பேச்சை தவிர்த்தால் எந்த நாடு தமிழர்களின் முடிவு சரியானதென்று கூறப்போகின்றது? எனவே, பேச்சுக்களில் பங்குகொள்வது பிரச்னையல்ல – மாறாக, அதனை உச்சபட்சமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதென்னும் தந்திரோபாயத்தில்தான் தமிழர் தரப்பு கவனம் இருக்க வேண்டும்.