சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 1 ஆம் திகதி பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஐசிசியின் தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
மேலும், ஐசிசி குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில் குறைந்தது 15 பேரின் ஆதரவை ஜெய் ஷா பெற முடியும். இதனால் அவர் ஐசிசி தலைவராக வருவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது என்று சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் ஜெய் ஷா போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஜெய் ஷா இப்போது பிசிசிஐ செயலாளராக மட்டுமல்லாமல், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராகவும், ஐசிசி நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
ஐசிசி தலைவர் பொறுப்புக்கு ஜெய் ஷாவை தவிர்த்து மற்ற யாரும் போட்டியிடாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கும்பட்சத்தில் வரும் டிசம்பர் ஒன்றாம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.