சர்வதேச சமூகம் என்பது ஒரு பொதுவான அவதானம். உண்மையில் சர்வதேச சமூகம் என்பது ஒன்றல்ல – அது பல வகையானது. பல நிலைப்பாடுகளுடையது.
தமிழர்களுடைய நிலையில், மேற்குலக நாடுகளும், அந்த நாடுகளை மையம்படுத்தி இயங்கிவரும் அமைப்புக்களும்தான் சர்வதேச சமூகம் என்னும் வகைக்குள் அடங்குகின்றது.
அதிலும் குறிப்பாக சொல்வதானால், அமெரிக்காதான் இதில் பிரதானமானது.
கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் ஸ்கண்டினேவிய நாடுகள் பலவும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தாலும் கூட, அமெரிக்காவின் அசைவின்றி, இவற்றின் அசைவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கப் போவதில்லை.
அடுத்தது மேற்படி நாடுகளில், அரசாங்க ஆதரவுடனும். பொதுமக்களின் நன்கொடைகளாலும் இயங்கிவரும் தன்னார்வ கொடை நிறுவனங்கள். அமெரிக்க அரசாங்கத்தின் உதவி நிறுவனமான, அமெரிக்க உதவி நிறுவனம் (USAID)இதில் முதன்மையானது.
அதே போன்று மேற்குலக நாடுகளில் இயங்கிவரும் சர்வதேச அரசுசாரா நிறுவனங்களும் நாம் குறிப்பிடும் சர்வதேச சமூகம் என்பவற்றில்தான் அடங்கும்.
இவை அனைத்தினதும் ஆதரவையும், இணைந்துத்தான், நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவு என்பதை, விளங்கிக் கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது, அமெரிக்கா உட்பட்ட பலவேறு மேற்குலக நாடுகளும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன.
அமெரிக்கா இராணுவ தளபாட உதவிகளை நிறுத்தியிருந்தபோதிலும், அமெரிக்காவின் பயங்கரவாதம் தொடர்பான நிலைப்பாடு, நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களை பலவீனப்படுத்துவதற்கு பயன்பட்டதுடன், ராஜபக்ஷக்களுக்கு யுத்தத்தை வெற்றிகொள்ள முடியுமென்னும் நம்பிக்கையையும், கூடவே, யுத்தத்தின் மீதான உற்சாகத்தையும் ஏற்படுத்துவதற்கு பயன்பட்டது.
1997இல், அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு சர்வதேச பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டு, தடைசெய்தது.
அதனை இப்போதும் கடைப்பிடித்து வருகின்றது.
2006இல், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக பட்டியிலிட்டது.
கனடாவும் இதே ஆண்டு விடுதலைப் புலிகளை தடை செய்தது.
இவைகள் சமாதான முன்னெடுப்பை பலவீனப்படுத்தியதுடன், ராஜபக்ஷக்களை பலப்படுத்தியது.
இந்த பின்புலத்தில்தான் ராஜபக்ஷக்கள் நம்பிக்கையுடன் யுத்தத்தை முன்னெடுத்தனர்.
பாரிய அழிவுகளுடன் யுத்தம் முடிவுற்றது.
இப்போது அந்த இறுதி யுத்தத்தின் போதான போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில்தான் பேசப்படுகின்றது.
கடந்த பன்னிரெண்டு வருடங்களாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டாலும் கூட, இதுவரையில் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் பெரியளவில், கொழும்மை கட்டுப்படுத்துவதற்கு பயன்பட்டதாகவும் கூறிவிட முடியாது.
அதேவேளை கடந்த பன்னிரெண்டு வருடங்களில் போரால் உருக் குலைந்து போன வடக்கு கிழக்கு தமிழ் மக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு அமெரிக்க உதவி நிறுவனம் மற்றும் மேற்குலக அரசுசாரா நிறுவனங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பணி களை ஆற்றவில்லை.
தென்னிலங்கைக்கே, அதிக கொடைகள் வழங்கப்படுகின்றன.
அமெரிக்க உதவி நிறுவனம் ஒரு சில திட்டங்களை வழங்கியிருந்தாலும் கூட, கொழும்பு மைய, நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தில் (நிதியளவில்) ஒரு பங்கு கூட வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படுவதாக தெரியவில்லை.
இது அமெரிக்க உதவி நிறுவனத்தின் தவறா அல்லது திட்டங்களை கையாளும் உள்ளூர் அதிகாரிகளின் தவறா? உண்மையில் வடக்கு கிழக்கிற்கு பிரத்தியேக முக்கியத்துவத்தை அமெரிக்க உதவி நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
தமிழ் அரசியல்வாதிகளும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்ப தில்லை.
சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு என்பது, வெறுமனே ஜெனிவாவில் பிரேரணைக்கு வாக்களிப்பதுடன் முடிந்துவிடும் ஒன்றல்ல, அதற்குமப்பால், போரினால் உருக்குலைந்து போன, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு, சமூதாய முன்னேற்றத்திற்கான பங்களிப்பையும்
வழங்குவதாகும்.