-அலசுவது இராஜதந்திரி-
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமைப்பேரவையின் 46-வது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் உரையாற்றியபோது பேரவையில் அங்கம் பெறும் நாடுகளிடம் இலங்கைக்கு எதிராகக்கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை நிராகரிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் இக்கோரிக்கையை நோக்கும் போது சர்வதேச சமூகம் குறித்து எத்தகைய தவறான கண்ணோட்டத்தை இலங்கை கொண்டுள்ளதென்றே அறிந்து கொள்ள முடிகின்றது.
ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் இலங்கை விவகாரம் எதிரொலிக்க ஆரம்பித்த காலம் முதல், இலங்கை மீது ஜெனிவாவில் இன்றுவரை கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தம் ஏற்படுத்திய அழிவுகள் மற்றும் யுத்தக்குற்றங்கள் என்று வரையறை செய்யப்பட்டவை கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டுமென்பதையே வலியுறுத்துவதாக இருந்தன.
ஆனால் ஜெனிவா பிரேரணையை இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு விடயமாக கருதாமல் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் கருதி வருகின்றனர்.
தவறான கண்ணோட்டம்
இதன் வெளிப்பாடகவே ஜெனிவா பிரேரணையை இலங்கைக்கு எதிரான பிரேரணை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டு;ள்ளதோடு சர்வதேச சமூகத்தின் மீதும் தவறான கண்ணோட்டத்தை இலங்கை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சர்வதேச சமூகமோ அல்லது இந்தியாவோ இலங்கைக்கு எதிராக செயல்பட வேண்டியிருந்தால் மூன்று தசாப்த கால யுத்தம் இடம்பெற்ற வேளையிலேயே இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்க முடியம்.
ஆனால் இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டுமென்பதில் சர்வதேச நாடுகள் பல முனைப்பாக இருந்ததோடு அந்நாடுகளில் பல ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் உறுப்பு நாடுகளாகவும் இருக்கின்றன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சமூகத்தின் அனுசரணையை தமிழீழ விடுதலைப்புலிகள் உரிய வகையில் கையாளத்தவறியமையே அதன் முற்று முழுதான அழிவுக்கு காரணமாக அமைந்திருந்தது.
மறுபுறத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் ரீதியாகவே வடக்கு-கிழக்கு பிரச்சினையை கையாள வேண்டுமென்பதில் சர்வதேச சமூகம் உறுதியாக இருந்த காரணத்தினாலேயே 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்பலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டதோடு சர்வதேச சமூகமும் மௌனமாக இருந்தது.
அப்பாவி மக்கள் பாதிப்பு
இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற ரீதியில் கண்மூடித்தனமாக யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் உறுப்பு நாடுகள் கவனத்தில் எடுத்துள்ளன.
இந்நிலையில் ஜெனிவாவில் இலங்கை மீதான பீரேரணையை இலங்கைக்கு எதிரான பிரேரணை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுவாரேயானால் அவர் தனது நாட்டு மக்களுக்கே அநீதியான ஒரு போக்கை கடைப்பிடிக்கிறார் என்றே கருத முடியும்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாடு பிளவுபடுவதை தடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுவாரேயானால் யுத்த அனர்த்தத்தினால் சகல தரப்பினராலும் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களும் இலங்கையர்களே என்பதை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிய வேண்டியவராகின்றார்.
இந்நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டின் வடக்கு-கிழக்கு மக்களே தமக்கு ஜெனிவா மூலமாக நீதியை வேண்டி நிற்கிறார்கள் என்பதையும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கருத்தில் கொள்ள வேண்டியவராகின்றார்.
எனவே ஜெனிவாவில் இலங்கை மீதான பிரேரணையை எவ்வகையில் சிறந்த இராஜதந்திர அணுகுமுறையோடு கையாள முடியும் என கவனத்தைச்செலுத்துவதைவிட அப்பிரேரணை இலங்கைக்கு எதிரானதாகும் எனக்குறிப்பிடுவது இலங்கை மீது சர்வதேச சமூகம் மேலும் அவநம்பிக்கை கொள்ள வைப்பதாக அமையும் என்றே கருத முடியும்.