சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு!

0
6

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று திங்கட்கிழமை (07) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் நாட்டின் எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைய தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

வளர்ந்து வரும் பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தூதுக்குழுத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சஞ்சய பந்த், பணிக்காலம் முடிந்து செல்லும் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர், சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி மார்த்தா வோல்டெமைக்கேல் மற்றும் வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.