சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில், மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பஜார் பகுதியில், இன்று காலை 11.00 மணியளவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகள், கிராம மட்ட அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அரச காணிகள் கொள்ளை தொடர்பாக நீதியை பெற்றுத் தாருங்கள்,
பல அரச அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் பல மேய்ச்சல் தரைகள், கடற்கரையோரம், காட்டு நிலங்கள் போன்றன, பணக்காரர்களுக்காக தாரைவார்க்கப்படுகின்றன. அதனை விரைந்து தடுத்து நிறுத்தவும்.
மணல் வளம் பல வசதி படைத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளால் சூறையாடப்பட்டு வருகிறது.
கடல் வளம் முறையற்ற நிலையில் அழிக்கப்பட்டு வருகிறது.
இந்திய டோலர் படகுகள் எமது மீனவர்களின் வியாபாரத்தை சிதைக்கின்றனர்.
கடற்றொழில் அமைச்சானது, தெற்கில் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்ககின்ற போதிலும், வடக்கு மீனவர்கள் மிகவும் ஒடுக்கப்படுகின்றார்கள்.
இந்த நிலை மாற வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.
என பல கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.