சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை பொறுப்புக்கூற செய்வதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்த வேண்டும் என கோரி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும், இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் சர்வதேச குற்றங்கள் என்பன சர்வதேச சட்டத்தையும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் மீறியுள்ளன.
அத்துடன், இது தொடர்பில் இலங்கையில் நீதியும் பொறுப்புக் கூறலும் இல்லாமை கவலையளிக்கிறது.
இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையிலிருந்து விலகி சுதந்திரமாகவுள்ளனர்.
இதுவே, இலங்கை எதிர்கொள்ளும் அரசியல், சமூக நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிரான விடயமாகும்.
எனவே, அதனை தடுப்பதற்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அழுத்தத்தை வழங்கவேண்டும் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.