சர்வதேச ரீதியில் நிதியுதவிகளை பெறுவதற்கு அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்- சமன் ரத்னப்பிரிய

0
187

சர்வதேச ரீதியில் நிதியுதவிகளை, கடனுதவிகளை பெற்றுக்கொள்ள முதலில் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரிசையில் நிற்பது, வாழ்வாதார செலவீனம் அதிகரித்திருப்பது, 21ஆவது திருத்தம் தொடர்பிலலேயே தற்போது நாட்டில் அதிகம் பேசப்படுகின்றது.

அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காகவே 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. அரசியலில் உறுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளாது நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடியாது என்பது தற்போதைய நிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா அதேபோன்று சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றுடன் நிதியுதவி தொடர்பில் கலந்துரையாடும்போது நாட்டில் அரசியல் உறுதிப்பாடு தொடர்பில் அவர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்புகின்றனர்.

இருக்கும் அரசாங்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை. தற்போதைய ஜனாதிபதி, இதற்கு முன்பு இருந்த அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை உலக நாடுகள் அவதானித்துக்கொண்டே இருக்கின்றன.

அரசியல் உறுதிப்பாடற்ற ஒரு அரசாங்கத்துக்கு கடனை, நிதியுதவியை வழங்குவதற்கு உலக நாடுகள் விரும்பவில்லை.

தற்போதைய அரசாங்கத்தில் பிரதமர் ஒருவர் விலகி புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் இவர்கள் தொடர்பிலும் ஒரு சந்தேகத்துக்குறிய நிலைமையே உலகளவில் காணப்படுகின்றது.

விசேடமாக கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள் தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவிகளை ஏற்றுள்ளனர்.

எனவே தற்போதைய அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை என்பதில் பிரச்சினை உள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மொட்டுக்கட்சிக்கே காணப்படுவதால் அரசியலில் உறுத்திப்பாடு இல்லை என்பது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கூறப்படுகின்றது.