

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்’ சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியின் சார்பாக போட்டியிட்ட மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்’ விளையாட்டின் 2024ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்கு பற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம் பெற்றது.
குறித்த விளையாட்டு போட்டியில் பங்கு பற்றிய இலங்கை அணி ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.
இதில் இலங்கை அணி சார்பாக பங்கு கொண்ட மன்னார் மாவட்ட வீரர்களுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று இடம்பெற்றது.
இதன் போது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் அருட் சகோதரர் சந்தியோகு, மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எம்.பயஸ், இலங்கை ரோல் போல் சம்மேளனத்தின் செயலாளர் தபேந்திரன், மன்னார் மாவட்ட ரோல் போல் சம்மேளன தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட மன்னார் மாவட்ட விளையாட்டு துறை இணைப்பாளர் மற்றும் முசலி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கங்களையும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கி வீரர்களை கௌரவித்தனர்.
ரோல் போல் விளையாட்டானது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முதலாக மன்னர் மாவட்டத்தில் விளையாட்டு குழு ஆரம்பிக்கப்பட்ட தாகவும், மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்கள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருவதாகவும் சர்வதேச ரோல் போல் விளையாட்டு எதிர்வரும் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற உள்ளதாகவும் இலங்கை ரோல் போல் சம்மேளனத்தின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.