மீண்டும் சர்வதேச விசாரணை என்னும் சொல் அதிகளவில் உச்சரிக்கப்படுகின்றது.
இதுவரையில், தமிழ்க் கட்சிகளால் மட்டும் உச்சரிக்கப்பட்ட சொல்லை – தற்போது, தென்பகுதியிலுள்ள கட்சிகளும் – ஏன்
எதிர்க்கட்சித் தலைவரும் உச்சரிக்கின்றார்.
அமைதியாக இருக்கும் சம்பந்தனும் இதுபற்றி பேசியிருக்கின்றார்.
இவ்வாறான அறிக்கைகள் மூலம்தான் சம்பந்தன் இருக்கின்றார் என்பதையே மற்றவர்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் தமிழ் கட்சிகள் மத்தியில் சர்வதேச விசாரணையை கோருவதில் யார் சரியானவர்கள் என்றவாறான போட்டியொன்று நிலவியது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் சுமந்திரன்மீது குற்றம்சாட்டுவதும் பின்னர், சுமந்திரன் அணியினர் காங்கிரஸ்மீது
குற்றம்சாட்டுவதாகவும் நாட்கள் நகர்ந்தன.
அண்மைக்காலமாக, தமிழ் கட்சிகளின் சர்வதேச விசாரணை கோரிக்கையானது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகியிருந்தது.
அவ்வப்போது, அமெரிக்க கொடியுடன் வீதிகளில்கூடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமே சர்வதேச விசாரணையென்னும் சொல்லை உச்சரித்துக்கொண்டிருக்கின்றனர்.
சனல் – 4 காணொலி வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் சர்வதேச விசாரணையை பலரும் உச்சரிக்கின்றனர்.
தமிழ் மக்களின் சர்வதேச விசாரணைக் கோரிக்கையின்போது அதென்ன விசாரணையென்று கேட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித்தோ ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்பதில் பிடிவாதமாகப் பேசுகின்றார்.
குற்றங்களை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு வழங்கவும் தயாரென்றும் கூறுகின்றார்.
ஈஸ்டர் தாக்குதலானது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் விளைவு.
உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
இந்த அமைப்பு உலகின் பல பாகங்களிலும் பல தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றது.
சிரியாவில் அதன் பலமான தளத்தை இழந்து போனதைத் தொடர்ந்து, ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் தலைவர்
தலைமறைவானார்.
அதன் பின்னர், ஐ. எஸ் அமைப்பின் உலகளாவிய வலையமைப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டதாகவே கருதப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் 2019 ஏப்ரலில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதல் இடம்பெற்று இரு தினங்களிலேயே இது அவர்களுடைய தாக்குதல்தான் என்பதை ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
சிலுவை யுத்தக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை என்னும் அடிப்படையில் குறித்த தாக்குதலை அவர்கள் கொண்டாடினர்.
உறை நிலையிலிருந்த ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பின் வலையமைப்புகள் பலவும் இலங்கை தாக்குதலை கொண்டாடின.
இந்த நிலையில் இது தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று இடம்பெற்றால் யாரை தண்டிப்பது. ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பின்
தலைவரையா? உலகில் எங்காவது ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பின் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கின்றதா?
உண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை கோருவதானது வெறும் தேர்தலுக்கான ஆட்டம் மட்டுமே! உண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணைக் கோரிக்கையென்பது இறுதியில் தமிழ் கட்சிகளின் சர்வதேச விசாரணைக் கோரிக்கையை செல்லாக் காசாக்கவே பயன்படப்போகின்றது.