புதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் சபை ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும், சர்வ கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைய
அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி தனது அக்கிராசன உரையில் அழைப்பு விடுத்தார்.
அத்தோடு தனது உரையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையை வென்று ஜனாதிபதியாகியிருக்கின்றேன்.
பல்லின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம், இன்று இலங்கையர் என்ற ரீதியில் நாடாளுமன்றில் ஒன்றுகூடியுள்ளோம்.
அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளித்து, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்.
வீழ்ந்திருந்த நாட்டை, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நான் பொறுப்பெடுத்திருக்கின்றேன்.
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணைந்து பணியாற்றுவதையே பெரும்பான்மையானவர்கள் விரும்புகின்றனர்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன்.
சர்வ கட்சி அரசு என்பது ஒரு கட்சி மாத்திரம் தான்தோன்றித்தனமாக செயற்படும் வாய்ப்பை இல்லாமலாக்கும்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாலேயே எமது நாடு அரசியல் ரீதியிலும் வீழ்;ச்சியடைந்தது.
உக்ரைன் போர், கொவிட் தொற்று என்பனவும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
நாம் மீண்டெழுவதற்கு, பாரதப் பிரதமர் தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளது.
இந்திய மக்களுக்கு இலங்கையர்கள் சார்பில் எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
எரிபொருளுக்கான செலவை சரி செய்ய சில இறக்குமதி விடயங்களை தவிர்க்க வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு தடவை நாடு இவ்வாறு மோசமான நிலைமைக்குச் செல்லாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.
போட்டி மிகு ஏற்றுமதி செயற்றிட்டங்களை நாம் உருவாக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஓகஸ்ட் மாதம் மீண்டும் முன்னெடுத்துச் செல்லப்படும்.
வங்கி முறைமை ஊடாக வெளிநாடுகளில் இருந்து பணத்தை அனுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.
சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுப்போம்.
எமது நாட்டின் அனுகூலம்மிக்க அமைவிடத்தை நன்மை பயக்கும் விதத்தில் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்நிய முதலீடுகளை பூச்சாண்டிகளைக் காட்டி நிறுத்தியதன் விளைவை நாடு இன்று அனுமதிக்கின்றது.
திருகோணமலை எண்ணெய் குதம் தொடர்பில், தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டமையே, எரிபொருள் வரிசைக்குக் காரணம்.
ஜப்பான் இலங்கைக்கு புகையிரத சேவையை விஸ்தரிக்க வழங்கவிருந்த உதவியை தவறான பிரசாரங்களே தடுத்தன.
ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற வகையில் பொருளாதாரக் கொள்கையை மாற்றுவது சரியானதா? என்பதை சிந்திக்க வேண்டும்.
25 வருடங்களுக்கு என ஒரு நிலையான பொருளாதாரக் கொள்கையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை நாம் மாற்ற வேண்டும்.
எதிர்கால சந்ததிகளை மனதில் வைத்தே, எனது செயற்பாடுகளை நான் வகுக்கின்றேன்.
அனைத்து நாடுகளுடனும் நாம் நட்பு மிக்க ஒரு கொள்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
எரிபொருள் வரிசையை குழப்பி, எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது முக்கியமானதொரு தலையாய கடமையாகும்.
நாட்டின் ஜனாதிபதி சாமானிய பிரஜையாக இருக்க வேண்;டும்.
19வது திருத்தச் சட்டத்தில் இருந்த, நல்ல விடயங்களை உள்வாங்கி, 22வது திருத்தச் சட்ட வரைபை சமர்ப்பிக்கவுள்ளோம்.
புலம்பெயர் தமிழர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு, நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பொன்றை மாற்றுவதற்காக மக்கள் சபை ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளேன்’. என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.