சீனா தனது எண்ணங்களையும் திட்டங்களையும் முன்னோக்கி எடுத்து சென்றமையால் அந்நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றை கட்டியெழுப்ப முடிந்ததது. இதன் காரணமாகவே உலகின் அசுரர்களுக்கெல்லாம் அசுரனாக சீனா திகழ்வதாக தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, சவால்களை வென்றெடுக்கக் கூடிய நம்பிக்கையைக் கொண்டுள்ள நாடாகவுள்ள நாம், அந்த சவால்களை வென்று முன்னோக்கி பயணிக்க உறுதி எடுக்க வேண்டும் என தெரிவித்தார். நாட்டின் ஆயுர்வேத வைத்தியர்களை ஒருங்கிணைப்பதற்கான ‘வெதவரு’ எனும் தொலைப்பேசி செயலி அறிமுகம், ஆயுர்வேத திணைக்கள இணையத்தள அங்குரார்ப்பணம் மற்றும் ‘ஆயுர்வேத சமீக்சா’ சஞ்சிகை வெளியீடு ஆகிய நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் ஊடக அமைச்சரான பந்துல குணவர்தன, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்சிசிர ஜயகொடி, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்திரகுப்தா, ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் நாயகம் வைத்தியர் எம்.டி.ஜே. அபேகுணவர்தன உள்ளிட்ட சுதேச மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.