சிறுவர்களிடையே ஆபத்தான எலிக்காய்ச்சல் நோய் (லெப்டோஸ்பிரோசிஸ்) பரவல் தற்போது அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,
எலிக்காய்ச்சல் நோய் என்பது பெரும்பாலும் மாசுபட்ட மற்றும் சேற்று நீரை வெளிப்படுத்துவதன் மூலம் ஏற்படும் பற்றீரியா தொற்று ஆகும்.
பாடசாலை விடுமுறை நாட்களில் இந்த நோய் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் பெரும்பாலும் நெல் வயல்கள் அல்லது திறந்தவெளிகளுக்கு காற்றாடியை பறக்க விடுவது போன்ற செயல்பாடுகளால் நிகழ்கின்றன. இது நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாகும்.
காய்ச்சல் சுமார் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை நீடித்தால், அது எலிக்காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம்.
கண்கள் சிவத்தல் அல்லது மஞ்சள் நிறமாக மாறுதல், வயிற்று வலி மற்றும் அடர் மஞ்சள் சிறுநீர் ஆகியவை ஏனைய அறிகுறிகளாகும்.
எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை இருந்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம்.
முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த நிலை சிறுநீரகம் தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உலகளவில் எலி காய்ச்சல் தொற்றுகள் காணப்பட்டாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் இது மிகவும் பொதுவான ஒன்றாக காணப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1.03 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 58,900 உயிரிழப்புகள் எலி காய்ச்சலால் ஏற்படுகின்றன.