சிறைச்சாலை உத்தியோகத்தரை மண்டியிடச் செய்து தாக்கிய சம்பவம் : இராணுவ கப்டனுடன் பிரதான சந்தேக நபரும் நுவரெலியாவில் கைது!

0
188

நுவரெலியா கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்தபோது, மூன்று துப்பாக்கிகள் மற்றும் ரவைகளுடன் இராணுவ கப்டன் மற்றும் மினுவாங்கொடை தாக்குதலின் பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களிடமிருந்து கார் மற்றும் ஒரு வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 12ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் மினுவாங்கொட ராஜசிங்கபுர சிறைச்சாலை  உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற சந்தேக நபர்கள் அவரை மண்டியிடச் செய்து துப்பாக்கியால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரியின் சகோதரி மற்றும் தாயார் மீதும் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின்போது மற்றுமொரு நபர் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவருக்கு அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பண்டாரவத்தை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் ஹெயன்துடுவ தலுக்கல வீதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.