பல்லேகல தும்பர சிறைச்சாலையில் கடமையாற்றும் இரண்டு சிறைச்சாலை காவலர்கள் கடுகன்னாவ பகுதியில் போதைப்பொருளுடன் பொலிஸாரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சிறைக்காவலர்களும் சிவில் உடையில் இருந்த போதே கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் வசிக்கும் இந்த இரண்டு சிறைச்சாலை காவலர்களும் சில காலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் பல்லேகல தும்பர போகம்பர சிறைச்சாலையின் நான்கு சிறைக்காவலர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையில் மட்டுமன்றி போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பல சிறைச்சாலை காவலர்கள் தொடர்பிலும் கண்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.