இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், இராஜ்ய சபா உறுப்பினருமான வைக்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வைக்கோ, இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீட்டினை பெற்றுக்கொடுக்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க இந்திய மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் வைக்கோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் வைக்கோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீனவ உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வைக்கோ இந்த சேதங்களுக்கு இலங்கை கடற்படையிடம் இருந்து இழப்பீடு பெற மத்திய அரசு இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில், தமிழ்நாட்டின் – புதுக்கோட்டையை சேர்ந்த 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைக்கோ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல்வேறு மீனவ அமைப்புகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதுடன், போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றன.