கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
இந்நிலைமை காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
