பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகள் சில முயற்சிகளை மேற்கொள்கின்றபோது அல்லது, அரசாங்கத்துடன் பேச்சுகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது அல்லது அவ்வாறான நகர்வுகளுக்கான முயற்சிகள் வெளியில் தெரிகின்றபோது, சிவில் சமூகமென்னும் பெயரில் அறிக்கைகள் வெளிவருவதும் – சந்திப்புகள் இடம்பெறுவதும் – இறுதியில் அவ்வாறான சந்திப்புகளின் விளைவாக – இப்படித்தான் பேசவேண்டுமென்று ஆணையிடப்படுவதும் – தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் சாதாரணமாக இடம்பெறும் விடயங்களாகும்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வழமைபோல் சிவில் சமூகமென்னும் பெயரிலான அறிக்கைகளும் சந்திப்புகளும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
பொதுசன வாக்கெடுப்பின் மூலம்தான் எந்தவோர் அரசியல் தீர்வும் தீர்மானிக்கப்பட வேண்டுமென்றவாறான அறிக்கையொன்று வெளியாகியிருக்கின்றது.
அதேபோன்று, வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவென்னும் பெயரில் இயங்கிவரும் அரசுசாரா நிறுவனங்களும் சமஷ்டி
அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்தி அரசுசாரா நிறுவன ஒன்றுகூடல்களை முன்னெடுக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க – கூட்டமைப்பு சந்திப்பை தொடர்ந்தே இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதற்கும் அப்பால், சக்திவேல் என்னும் கிறிஸ்தவ மதகுருவானவர் கூட்டமைப்புக்கு திராணியில்லை என்றவாறு அறிக்கையிட்டிருக்கின்றார்.
பொதுவாக கட்சிகள் மீதுதான் அனைவருமே குற்றம்சாட்டுவதுண்டு.
ஆனால், இப்போது கட்சிகளையும் சாப்பிட்டுவிடுமளவுக்கு, சிவில் சமூகமென்னும் பெயரில் இயங்குபவர்கள் செயல்படுகின்றனர்.
விமர்சனங்களை முன்வைப்பது அவசியம்.
அந்த வகையில் சிவில் சமூகத்தின் தலையீடும் ஆலோசனைகளும் அவசியம்.
சிவில் சமூகத்தின் செயல்பாடுகள் ஜனநாயக அரசியலின் அத்திபாரமாகும்.
ஆனால், அவ்வாறான செயல்பாடுகள் பொறுப்புணர்வுமிக்கதாகவும் கட்சிகளை சரியான திசையில் வழிநடத்துவதாகவும் இருக்கவேண்டும்.
அவ்வாறில்லாது, பொறுப்பற்ற வகையிலான தலையீடுகளாக இருக்கக்கூடாது.
ஆறு கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய சந்தர்ப்பத்தின் போதும், இவ்வாறுதான் சிவில் சமூகமென்னும் பெயரில் அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.
அது விமர்சிக்கப்பட்டது.
ஆனால், அவ்வாறு விமர்சித்தவர்கள் அதன் பின்னர் எந்தவகையான செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை.
சிவில் சமூகமாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் தொடர்சியான செயல்பாடுகளில் இருக்கவேண்டும்.
‘அத்தி பூத்தாற் போன்று’ என்று கூறுவது போன்று சிவில் சமூக குழுக்கள் செயலாற்ற முடியாது.
தொடர்ச்சியான செயல்பாடுகள் இருக்கின்ற போதுதான், அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளும்.
இதேவேளை, இவ்வாறு சிவில் சமூகமாக அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு மத்தியில் ஒருங்கிணைவோ – உடன்பாடுகளோ இல்லை.
தமிழ்த் தேசிய கட்சிகளிடம் ஒற்றுமையை கோருபவர்கள் முதலில், சிவில் சமூகமாக விடயங்களில் ஒற்றுமைப்படவேண்டும். நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களில் எவ்வாறு செயலாற்றுவதென்னும் ஆலோசனைகளை கட்சிகளிடம்
முன்வைக்கவேண்டும்.
அவ்வாறில்லாது, கூட்டமைப்பை பலவீனப்படுத்தி – இருக்கும் ஒரே யோர் அரசியல் அமைப்பையும் பலவீனப்படுத்தும் நோக்கில் செயலாற்றக்கூடாது.
தமிழ்த் தேசிய கட்சிகள் மீதான விமர்சனங்கள், கண்டனங்கள் அவசியம்.
ஆனால், அது கட்சிகளையும் சிவில் சமூகத்தையும் எதிரியாக்கும் அணுகுமுறையில் அமையக்கூடாது.