25 C
Colombo
Wednesday, September 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகை

சீன பாதுகாப்பு அமைச்சர் வே பங்கெற் (Wei Fenghe) இரு நாள் பயணமாக நேற்றைய தினம் கொழும்பிற்கு விஜயம் செய்திருக்கின்றார். கொரோனாவிற்கு பின்னரான சூழலில், சீனாவின் மிக முக்கிய இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவர் கொழும்பிற்கு விஜயம் செய்திருக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், சீனாவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான யங் ஜேசே (Yang Jiechi) கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் அரசாங்க உள்ளக மட்டத்திலும், எதிர்கட்சியினர் மத்தியிலும் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கின்ற சூழலிலேயே, சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் இடம்பெற்றிருக்கின்றது.

இதன்போது, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் சீன பாதுகாப்பு அமைச்சர் நிச்சயம் பேசுவார் என்பதை ஊகிப்பது கடினமான ஒன்றல்ல. சீனாவிடம் மேலும் கடன் உதவிகளை அரசாங்கம் பெற்றிருக்கின்ற நிலையிலும், சீனாவிடமிருந்து பொருளாதார முதலீடுகளை எதிபார்த்திருக்கும் நிலையிலும், சீனா ஒருவேளை, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நிபந்தனைகளை முன்வைக்குமாயின், அதனை அரசாங்கத்தினால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது.

சீனாவின் பிடியிலிருந்து கொழும்பால் விலகியோட முடியாது. அதற்கான எல்லைக் கோட்டை இலங்கை இழந்துவிட்டதென்பதே, பொதுவான கணிப்பு. சீன விவகாரங்களில் நிபுணரான அமெரிக்க பேராசிரியர் பட்றிக் மென்டிஸ், முப்பது வருடங்களுக்கு பின்னர், சீன வம்சாவளி ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலையிருப்பதாக கூறுமளவிற்கு, சீனாவின் செல்வாக்கு இலங்கைக்குள் வலுவாக வேரூன்றிவிட்டது. பட்றிக் மென்டிஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராவார்.

இலங்கைமீதான சீனாவின் செல்வாக்கை ஆட்சி மாற்றங்களினால் தடுத்து நிறுத்தக்கூடிய – அல்லது, ஓர் எல்லைக்குள் முடக்கக் கூடிய காலம்கூட, கடந்துவிட்டதாகவே தெரிகின்றது.

2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் இதற்கு சிறந்த உதாரணமாகும். ஏனெனில், அந்தளவிற்கு சீனாவின் பிடிக்குள் இலங்கை அகப்பட்டுவிட்டது. சீனாவின் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாத நிலையில்தான், அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்கவேண்டிய நெருக்கடிக்கு ரணில் அரசாங்கம் தள்ளப்பட்டது.

உண்மையில், இலங்கையை சீனாவின் பிடிக்குள் தள்ளிவிட்ட பெருமை மஹிந்த ராஜபக்ஷவையே சாரும். 2015இல் ஆட்சி மாறிய போதிலும்கூட, ஏற்கனவே மஹிந்த செய்துவிட்டுப் போனவற்றின் பிடியிலிருந்து, புதிய அரசாங்கத்தினால் இலகுவில் வெளியில்வர முடியவில்லை.

இதன் காரணமாகவே, மேற்குலகின் நண்பரான ரணில் விக்கிரமசிங்க அவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிhப்;பந்தம் ஏற்பட்டிருந்தது. எப்போது ரணில் அவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டாரோ, அத்துடன் ரணிலும் மேற்குலகால் கைவிடப்பட்டார். அவரது அரசியல் வாழ்வும் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை சீனா, மிகவும் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது. இலங்கைக்கு தேவையானவற்றை நிபந்தனையின்றி செய்ததன்மூலம், இலங்கையை தனது விஸ்தரிப்புவாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கவைப்பதில் வெற்றிபெற்றது.

இந்தியாவின் தயக்கத்தையும் – அமெரிக்காவின் மனித உரிமைகள்மீதான கரிசனையையும் – சீனா தனது சதுரங்க ஆட்டத்திற்கான முதலீடாக பயன்படுத்திக்கொண்டது.

போர் முடிவுற்றதன் பின்னர் அதுவரையான நிபந்தனையற்ற ஆதரவை, மெதுவாக நிபந்தனையுடன்கூடிய ஆதரவாக உருமாற்றியது. அதில், சீனா முற்றிலும் வெற்றிபெற்றுவிட்டது.

இலங்கைத் தீவை அடிப்படையாகக்கொண்டு – நடைபெறப் போகும் சர்வதேச சதுரங்க அரசியலின் அடிப்படையாக சீனாவே இருக்கப்போகின்றது. இது என்ன வகையான விளைவுகளை இலங்கைக்குள் இறக்குமதி செய்யும் என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது. ஆனால், நிச்சயம் சில விளைவுகளை இலங்கை எதிர்கொள்ளவேண்டி வரலாம்.  

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles