மலையகத்தில் நிலவும் கன மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 159 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அதன்படி, வலப்பனை பிரதேச செயலக பிரிவில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேரும், நுவரெலியா பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும், ஹங்குரான்கெத்த பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 136 பேரும், கொத்மலை பிரதேச செயலக பிரிவில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை சிறிய பாதிப்புக்கள் ஏற்பட்ட குடியிருப்புக்களைச் சேர்ந்த சிலர் அதனை தற்காலிகமாக திருத்திக்கொண்டு அதே குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.
வலப்பனை பிரதேச செயலக பிரிவில் 40 வீடுகளும், நுவரெலியா பிரதேச செயலக பிரிவில் 9 வீடுகளும், ஹங்குரான்கெத்த பிரதேச செயலக பிரிவில் 39 வீடுகளும், கொத்மலை பிரதேச செயலக பிரிவில் 71 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட பணிப்புரை விடுத்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.