சுகாதார சேவைத்துறையினரின் தொழிற்சங்க நடவடிக்கையினை கைவிடுவது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக, சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி சில சுகாதார சேவைத்துறையினர் கடந்த 7ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக நாட்டின் பல வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக செல்லும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்தநிலையில், நேற்;றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கத்துறையினருடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஜனாதிபதி செயலாளர் ஒழுங்கு செய்திருந்தார்.
இதற்கமைய சுகாதார அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக, சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.