சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

0
221

களுத்துறை மாவட்டம் மத்துகமை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமானோர் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்ட சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்படி, இந்தத் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய அந்த அலுவலக சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, ஹொரணை குருகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழில்சாலையின் 200இற்கும் அதிக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த தொழில்சாலையுடன் இணைக்கப்பட்ட அகலவத்தை கெகுலன்தல மற்றும் பிம்புரவிலுள்ள தொழில்சாலைகளில் தேர்வு செய்யப்பட்ட சில ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மூவர் கொரோனா தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் திகதி மேலும் 204 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி, கெகுலன்தல தொழில்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.