ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திரக் கட்சியினருக்கு அநீதி இழைக்கப்படவில்லை. மாறாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கே அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே, சுதந்திரக் கட்சியினர் பெரமுனவுக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும் என சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்பர தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உண்மைத் தன்மையை அறிந்து கருத்துரைக்க வேண்டும்.
அடுத்து இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஒரு சிலர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தனித்துப் போட்டியிட்டு மக்களாணையைப் பெறமுடியும் என்பதை 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் ஊடாக நிரூபித்துள்ளோம்.
மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சியினர் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாகாண சபைத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அமோக வெற்றிபெறும்.
சிறந்த கொள்கைகள் ஏதும் இல்லாத வகையில் எதிர்த்தரப்பினர் அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் எனத் தெரிவித்தார்.