சென்னை அசத்தல் வெற்றி! ராஜஸ்தான் படுதோல்வி!!

0
157

ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தான் ரோயல்ஸும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ருதுராஜ் கெய்க்வாட்டும், டூப்பிளஸியும் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். பவுண்டரியுடன் ஓட்ட கணக்கை ஆரம்பித்த சென்னை சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. 

அதன்படி ருதுராஜ் 10 ஓட்டங்களுடனும், ஜெய்தேவ் உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய டூப்பிளஸ்ஸி 33 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரய்னா 18 ஓட்டங்களுடனும், அம்பத்தி ராயுடு 27 ஓட்டங்களுடனும், தோனி 18 ஒட்டங்களுடனும், ஜடேஜா 8, சாம் கர்ரன் 13 ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதிகட்டத்தில் பிராவோவின் அதிரடியால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது. 
ஆடுகளத்தில் பிராவோ 8 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 20 ஓட்டங்களுடனும், தீபக் சாஹர் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சு சார்பில் ராஜஸ்தான் தரப்பில் சகாரியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

189 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட மறுபக்கம் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

மனன் வோரா 14 ஓட்டங்களுடனும், சஞ்சு சாம்சன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற, ராஜஸ்தானின் நடுவரிசை வீரர்களில் துடுப்பாட்டத்தை சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மொயீன் அலியும், ரவீந்திர ஜடோஜாவும் சீர்குலைத்தனர். 

ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும் இவர்களின் சுழலில் சிக்கி ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

இதனால் 20 ஓவர்கள் நிறைவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 45 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

சென்னை சார்பில் பந்து வீச்சில் மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளையும், தாகூர் மற்றும் பிராவோ தலா  ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக மொயின் அலி தெரிவானார்.