செப்டம்பர் 27 இல் லண்டனிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படவுள்ளது

0
81

பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்த மாதம் 27-ஆம் திகதிக்கு பின்னர் செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லண்டனில் செயல்பட்டுவரும் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளை தலிபான் ஆட்சியாளர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். எனவே, அந்தத் தூதரகம் மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்கான ஆப்கன் தூதவர் ஸலாமி ரஸூல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வரும் 27-ஆம் திகதிக்குப் பின்னர் தூதரகம் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து அந்த நாட்டை தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் கைப்பற்றினர். எனினும், அவர்களின் அரசை பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

அந்த நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்களில், தலிபான்களுக்கு முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.

இந்தச் சூழலில், முந்தைய அரசுடன் தொடர்புடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கன் தூதரகங்களுடன் தொடர்பைத் துண்டிப்பதாக தலிபான் ஆட்சியாளர்கள் கடந்த ஜூலை மாதம் அறிவித்தனர்.

பிரிட்டன், ஜேர்மனி, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், போலந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் விநியோகிக்கும் விசா இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள ஆப்கன் தூதரகம் மூடப்படுவதாக பிரிட்டன் அரசு தற்போது அறிவித்துள்ளது.