யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக மூன்று என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 23ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது மூன்று மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. ஒரு மனித என்புத் தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 104 என்புத் தொகுதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 96 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரனிதா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியல் துறை மாணவர்கள் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.