செல்வந்தர்களை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு!

0
78

கோடிக்கணக்கான கடன் மற்றும் வரிகளை செலுத்த தவறிய நட்புவட்டார பெரும் செல்வந்தர்களை பாதுகாத்துக் கொண்டு, அரசாங்கம் மேலும் பல வரிகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,தற்போது நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், புதிய வகை வரிகளை மக்கள் மீது விதிக்க சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் தரப்பில் நின்று சிந்திக்காமல் மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தை திணிக்கும் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்பட்டதே இதற்குக் காரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

IMF பங்கேற்பில் நாட்டை கட்டியெழுப்புவது யதார்த்தமானதும் நடைமுறையானதுமான விடயம் ஒன்றாக அமைந்தாலும், முதுகெழும்பை நிமிர்த்திக் கொண்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கும், மக்களை மையமாகக் கொண்ட ஒப்பந்தத்தை எட்டுவது அரசின் பொறுப்பாகும்.

அரச வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனமையினாலயே புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன. மேலதிக வரிகளை விதிக்காமல் வரி அறவீட்டுத் வேலைத்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டும்.

நட்புவட்டார பெரும் செல்வந்தர்கள் பலம் வாய்ந்தவர்கள்  மீளச் செலுத்த வேண்டியுள்ள கோடிக்கணக்கான பெருந்தொகை கடனை தள்ளுபடி செய்துள்ளனர். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் பல கோடி கடன்களை செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துமாறு நிதியமைச்சரிடம் கேட்ட போது, கடன் கொடுக்கல் வாங்கல்கள் இரகசியமானவை எனவும், பெயர்களை வெளியிட முடியாது என்று கூறினார் என குறிப்பிட்டுள்ளார்.