44வது செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னையில் நடக்கிறது.
மாமல்லபுரத்தில் 7ம் நூற்றாண்டு குகைக் கோயில்களுக்கும் சிற்பங்களுக்கும் நடுவே வேட்டி கட்டிய ஒரு குதிரையின் உருவமும் தென்படுகிறது.
இவன்தான் ‘தம்பி’. 44வது செஸ் ஒலிம்பியாட் சின்னம்.
இந்த சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னைக்கு அடுத்த மாமல்லபுரத்தில் இன்று ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒலிம்பியாட் இணையதளத்தில் இது தொடர்பாக உள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள்:இந்தியாவில் முதல் முறையாக ஒலிம்பியாட் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காகப் பதிவு செய்துகொண்டோர், இதுவரை நடந்த போட்டிகளில் பதிவு செய்துகொண்டவர்களைவிட அதிகம். சென்னை ‘இந்திய சதுரங்க விளையாட்டின் புனிதத் தலம்’ என்றழைக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக சென்னையும் தென்னிந்தியாவும் சதுரங்கத்தில் முன்னோடிகளாக விளங்குகின்றன.குறிப்பாக, இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டில் இந்திய சதுரங்க சங்கம் இங்கே தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சதுரங்க அமைப்புகள் இயங்குகின்றன. இது தவிர, பல கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது தமிழ்நாடு.

முன்னோடியான தமிழ்நாடு
இந்தியாவைச் சேர்ந்த 74 சதுரங்க கிராண்ட் மாஸ்டர்களில் 41 பேர் தென்னிந்தியர்கள். அவர்களிலும் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
சதுரங்க வல்லுநர்கள் இதற்கு முக்கியமான சில காரணங்களைக் கூறுகிறார்கள்.
1961ல் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் ஆன மானுவல் ஆரோன் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். ஒரு வகையில் அவர்தான் தமிழ்நாட்டில் சதுரங்க விளையாட்டு வளர்வதற்கான களத்தை அமைத்தவர். இவர் 1972ம் ஆண்டு மைக்கேல் டால் (Michael Tal) சதுரங்க சங்கத்தை நிறுவினார். பல இளம் வீரர்கள் இங்கு பயின்றவர்களே. விஸ்வநாதன் ஆனந்த் உட்பட. சோவியத் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த சங்கம், சோவியத் யூனியன் உடையும் வரை நடந்தது.
இதுபோன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டின் வளர்சிக்கான முக்கியமானதொரு விஷயத்தை ஏற்படுத்திக் கொடுத்தன — வீரர்கள் ஒன்றுகூடி, விளையாடி, உரையாடக்கூடிய இடங்கள்.
“மற்ற மாநிலத்தின் சதுரங்க வீரர்களும் இச்சங்கங்களில் விளையாட அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்தனர்,” என்கிறார் தமிழ்நாட்டில் உருவான கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான ஆர் பி ரமேஷ். இவர் ஒலிம்பியாடில் விளையாடும் ஆண்கள் அணிகளில் ஒன்றுக்கு பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
தலைநகர் சென்னையில் மட்டுமல்ல, சிவகாசி, மதுரை, பழனி, கோவை போன்ற சிறு நகரங்களிலும் சதுரங்க சங்கங்கள் செயல்பட்டன. இவை போட்டிகளும் நடத்தின.
சில தனிநபர்களின் ஆர்வத்தாலும் முனைப்பாலும் இவை நிகழ்ந்தன. அவர்கள் போட்டிக்கு வந்த வீரர்களுக்கு உணவு தங்குமிடம் மற்றும் பரிசாக நல்ல தொகைகளையும் வழங்கினர், என்கிறார் தமிழ்நாடு சதுரங்கச் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர் அனந்தராம்.
“1979ம் ஆண்டிலேயே சிவகாசியில் ஆசிய ஜூனியர் சதுரங்கப் போட்டிகளை நடத்தினோம். அதேபோல பழனியில் ஆர் குருசாமி நினைவு சதுரங்கப் போட்டிகள், மதுரையில் மாப்பிள்ளை விநாயகர் சதுரங்கப் போட்டிகள் போன்றவையும் சிறப்பாக நடைபெற்றன,” என்கிறார் அனந்தராம்.
இவை, பல இளம் வீரர்கள் உருவாகி மெருகேறி வர பெரிதும் உதவின.

ஆரோனுக்கு அடுத்து இத்தகைய ஆரோக்கிய சூழலிலிருந்து வளர்ந்து வந்தவர்தான் விஸ்வநாதன் ஆனந்த்தும், அவருக்குப் பிறகு வந்த சதுரங்க வீரர்களும். ஆனந்த் மிக இளம் வயதிலேயே சர்வதேச மாஸ்டர் ஆகிவிட்டார். 1988 அவர் கிராண்ட்மாஸ்டர் ஆகி, சர்வதேச தரவரிசையில், முதல் 10ம் இடங்களுக்குள் நுழைந்தார். இன்று அவர் இந்திய சதுரங்கத்தின் சர்வதேச முகம்.
அவரது வெற்றியைத் தொடர்ந்து பல குழந்தைகள் சதுரங்கத்தின் பக்கம் திரும்பினர். அவர்களது பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை கிராண்ட்மாஸ்டர்களாகப் பார்ப்பது ஒரு கனவாக மாறியது.
பிபிசிக்கு அளித்த பேட்டியொன்றில், விஸ்வநாதன் ஆனந்த், தான் சதுரங்கத்தில் ஆர்வம் தெரிவித்த்போது, தமது தாயார் உடனடியாகத் தம்மை ஒரு சதுரங்க சங்கத்தில் சேர்த்ததாகக் கூறியிருக்கிறார்.
அதேபொல், 1990களில், இணையதளத்தின் ஆதிக்கத்திற்கு முன்னர், சென்னை அடையாறில் இருந்த ‘செஸ் மேட்’ என்ற ஒரு கடை, சதுரங்க வீரர்களுக்கான போக்கிடமாக இருந்தது. சதுரங்கம் தொடர்பான புத்தகங்கள், சதுரங்கப் பலகைகள், காய்கள் போன்ற அனத்திற்கும் வீரர்கள் இக்கடையை நாடினர். இதை மானுவல் ஆரோனின் மகன் அர்விந்த் நடத்தினார்.
“அந்நாட்களில், இந்தியர்கள் யாரும் செஸ் தொடர்பான நூல்களை எழுதவில்லை. அக்கடையில் இறக்குமதி செய்யப்பட்ட செஸ் தொடர்பான பல நூல்கள் கிடைத்தன,” என்கிறார் ரமேஷ்.
இன்று பல முக்கியமான இளம் வீரர்கள் தென்னிந்தியர்கள். முக்கியமான சர்வதேச வீரரான மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்திய 16-வயது பிரக்ஞானந்தா, பலராலும் அடுத்த சர்வதேச சதுரங்க முகமாகப் பார்க்கப்படுபவர். இவரைப்போலவே, 19-வயதன பி இனியன், 16-வயதான டி குகேஷ் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 18-வயது நிஹல் சரீன் கேரளாவைச் சேர்ந்தவர்.
இவர்கள் இந்திய சதுரங்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வர் என ஆர்வலகள் கூறுகின்றனர். ஒலிம்பியாடில் இரண்டாவது இந்திய ஆடவர் அணி முழுக்க இந்த இளைய வீரர்களால் ஆனது.
“நாங்கள் நால்வரும் முதன்முறை ஒலிம்பியாடில் விளையாடுகிறோம். நாங்கள் அனைவரும் பதின்வயதினர்,” என்கிறார் பிரக்ஞானந்தா.
தற்போது, சதுரங்கத்தின் மெக்கா எனும் தம் பெயருக்கு ஏற்ப, சென்னை 44வது செஸ் ஒலிம்பியாடை நிகழ்த்துகிறது. ரஷ்யாவில் நிகழ இருந்த இப்போட்டி யுக்ரேன் போரின் காரணமாக இடம் மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது சென்னை அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது.
தமிழ்நாடு அரசு இப்போட்டியை நிகழ்த்த 92கோடி ரூபாய் செலவிடுகிறது.
இவ்வனைத்தையும் ‘தம்பி’ ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
Source BBC