ஜனாதிபதித் தேர்தலின் சர்வதேச முக்கியத்துவம்

0
191

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் மெதுவாகத் தீவிரமடைகின்றன.
அமைதியாக இருந்த பௌத்த பிக்குகளும் மற்றும் சிங்கள தேசியவாத குழுக்களும் மெதுவாக முகம் காட்டத் தொடங்குகின்றனர்.
பௌத்த பிக்குகள் அணியொன்று மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தது.
ரணிலிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுமாறு கோரியிருக்கின்றது.
13ஆவது திருத்தச்சட்டதிலுள்ள காவல்துறை அதிகாரத்தை நீக்குமாறு கோரி 22ஆவது திருத்தச்சட்டத்தை தனிநபர் பிரேரணையாக உதய கம்மன்பில முன்வைத்திருக்கின்ற சூழலில்தான் ரணிலிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுமாறு கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.
13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக ரணில் கூறியிருந்தார்.
இதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்குமான தரைவழித் தொடர்பை ஏற்படுத்தப் போவதாகவும் இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் ரணில் கூறிவருகின்றார்.
இவ்வாறானதொரு சூழலில் – ரணிலிடமிருந்து நாட்டை காப்பாற்றுதல் என்பதன் பொருள் என்ன? இந்தப் பின்புலத்தில் நோக்கினால் ஜனாதிபதி தேர்தல் சிக்கலானதாக மாறப்போவது உறுதியாகின்றது.
நிச்சயம் இந்தத் தேர்தல் முடிவுகளுக்கும் இந்திய – இலங்கை உறவுகளின் எதிர்காலத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கும்.
அதாவது, நிலைமைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுமாக இருந்தால் மாலைதீவில் ஏற்பட்டது போன்றதொரு நிலைமையும் ஏற்படலாம்.
இவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஜனாதிபதி தேர்தலைக் கையாளும் பொறுப்பை தமிழ்க் கட்சிகள் தீர்மானிக்க வேண்டும்.
2015இல் ஏற்பட்டது போன்று – சுருங்கச் சொன்னால் அதனை விடவும் சிக்கலானதொரு நிலைமையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் சர்வதேச முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது.
ஆனால், எதிர்பார்த்த விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில் 2018 உள்ளூராட்சித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மீண்டும் எழுச்சியுற்றனர்.
அதனைத் தொடர்ந்து, கோட்டாபயவின் எழுச்சி இடம்பெற்றது.
தற்போது அனைத்துத் தரப்புகளும் ஒப்பீட்டடிப்படையில் பலவீனமாக இருக்கின்ற சூழலிலேயே நாடு ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கவுள்ளது. இந்தியாவின் – அயல்நாடுகளின் அரசியல் உயர் குழாம்கள் – மத்தியில் தன் செல்வாக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை தேடுவதை ஒரு பிரதான அரசியல் தந்திரோபாயமாகவே சீனா கையாண்டு வருகின்றது.
இந்த நிலையில், இலங்கைத் தீவின் ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்குச் செலுத்துவதற்கு சீனா நிச்சயம் முயற்சிக்கும்.
இதனடிப்படையில் கட்சிகளைக் கையாள முற்படும்.
சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கையில் உள்நுழைவதற்கான அனுமதி ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தப்பட்டிருக்கும் விடயத்தை சீனா சாதாரணமான ஒன்றாக நோக்காது.
இலங்கையின் முடிவுக்கு சவால் விடும் வகையில் இலங்கையின் அயல்நாடான அதேவேளை மூலோபாய முக்கியத்தும் வாய்ந்த இடத்திலிருக்கும் மாலைதீவில் அதன் ஆய்வுக் கப்பலை நிறுத்திருக்கின்றது.
மாலைதீவின் சீன சார்பு அரசாங்கத்தின் ஊடாகவே இதனை சாத்தியப்படுத்தியிருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தனக்கு சாதகமான ஆட்சி என்னும் விடயம் சீனாவைப் பொறுத்தவரையில் முக்கியமானது.
இந்த அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது சீனாவைப் பொறுத்தவரையில் தவிர்க்கவே முடியாதது.
இந்த அடிப்படையில் நோக்கினால் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது உலகளாவிய சீன விரிவாக்க விடயத்துடன் நேரடியாகத் தொடர்புறுகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு கையாள வேண்டுமென்று சிந்திக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கட்சிகள் என்போர் இந்த விடயங்களின் அடிப்படையில்தான் விடயங்களை கையாள முயற்சிக்க வேண்டும்.
வழமைபோல் தென்னிலங்கை வேட்பாளர்களை நோக்கி கையை காட்டி விட்டு அமைதியடையும் விடயம் இனிப் பொருத்தமற்றது.