ஜனாதிபதியை சாடும் உதய கம்மன்பில

0
142

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயமாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளமை அடிப்படை மனித உரிமை மீறலாகும். நிறைவேற்று அதிகாரத்தை வரையறையில்லாமல் அமுல்பத்தினால் அதன் எதிர்தாக்கம் பாரதூரமாக அமையும் என்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கம் கொண்ட அரச இரகசிய சட்டக் கோவையின் 2ஆவது பிரிவின் கீழ் தலைநகரின் முக்கிய இடங்களை விசேட வர்த்தமானியின் ஊடாக அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார். 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கத்தின் பிரகாரம் ஒரு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதி எவ்வளவு தூரத்திற்கு வரையறுக்கப்பட்டிருக்கும் என்பதை அறிவிக்க வேண்டும். பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளமை மனித உரிமை மீறலாகும்.
நிறைவேற்று அதிகாரத்தை வரையறைக்கு அப்பாற்பட்டு செயற்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்தற்கு வரலாற்றில் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை ஆகிய முக்கிய அரச கட்டங்களின் பாதுகாப்பை சாதாரண சட்டங்களை கொண்டு பலப்படுத்தலாம். 1955ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய தேவை கிடையாது. மக்கள் போராட்டத்துக்கான காரணத்தை அறிந்து அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி அவதானம் செலுத்துவதை காட்டிலும் தனது பதவிக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்து விடுமா என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பின்னணியில் மக்கள் மீது நிறைவேற்று அதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டால் அதன் தாக்கம் பாரதூனமாக அமையும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.