ஜனாதிபதியின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் கருத்துக்கள் பதிவிட தடை!

0
236

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அனைவரும் கருத்துக்களை பதிவிட முடியாதவாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தில் பயனர்கள் கருத்துக்களை வெளியிட முடியவில்லை.

“நான் 26 ஜனவரி 2010 முதல் எம்.பி.க்கள், பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்தேன். இதற்கு முன் யாரும் அவர்களின் உத்தியோகபூர்வ பக்கத்தில் கருத்துகளை கட்டுப்படுத்தவில்லை” என சமூக ஊடக ஆய்வாளர் சஞ்சன ஹத்தொட்டுவ தனது ருவிற்றர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு செய்துள்ள இலங்கையின் முதல் அரசியல்வாதி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு மற்றும் வரலாற்றில் இல்லாதவாறு மின்வெட்டு அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில் அரசு, மற்றும் அரசியல்வாதிகளை மக்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் ராஜபக்சக்கள் வீடு செல்ல வேண்டும். (#GoHomeRajapaksas) கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் (#GoHomeGota2022) என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துப் பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.