கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது குறித்து அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள கடிதத்திலயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்களின் சமய விதியின் படி ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும். எந்த உயிரினத்தையோ அல்லது இறந்த உடலையோ எரிக்கக் கூடாது. அவை அடக்கம் செய்யப்பட வேண்டும்.என்பது இஸ்லாமியக் கோட்பாடு.
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது குறித்து முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு பலமுறை பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இது குறித்து அரசு இதுவரை கவனம் செலுத்தாமை குறித்து முஸ்லிம்கள் மன வேதனையில் உள்ளனர்.
உலக சுகாதார தாபனம் கொரோனாவினால் இறப்போரை அடக்கம் செய்ய முடியும் என்ற பரிந்துரையும் செய்துள்ளது. இதனடிப்படையில் பல நாடுகளில் கொரோனாவினால் இறந்த உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. எனினும் இலங்கையில் மட்டும் எரிக்கத்தான் வேண்டும் என்ற பிடிவாத நிலை காணப்படுகின்றது.
உயிரோடு உள்ளவர்கள் ஒரு மீற்றர் இடைவெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறையைப் பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையினர் ஒன்று கூட அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ்வண்டிகளில் அடுத்தடுத்த ஆசனங்களில் இருந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்து கொள்வதால் கொரோனா தொற்றாது என்பதால் தானே அரசு இத்தனையும் அனுமதித்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க சுமார் 6 அடி ஆழத்தில் அடக்கம் செய்யப்படும் உடலில் இருந்து கொரோனா தொற்று ஏற்படும் என்று கருதுவதை அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏன்ற கேள்வி சாதாரண மக்களிடமும் எழுந்துள்ளது.
எனவே இந்த விடயங்களை உண்மையான மனநிலையோடு நோக்க வேண்டும். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விடயத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையை ஒரு இனத்தின் பிரச்சினையாக கருதாமல் இலங்கையரின் பிரச்சினையாக கருதி சுமூகமான தீர்வை பெற்றுதருமாறு அக்கடித்தத்தில் அவர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.