ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா பண மோடி செய்த குற்றச்சாட்டில் நேற்று பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 250க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பின்னர் அநுராதபுரம், புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருக்கு எதிராக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சந்தேக நபருக்கு எதிராக மஹர நீதிவான் நீதிமன்றத்தில் 36 பிடியாணைகளும் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் 11 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் பல்வேறு பிரதேசங்களில் தலைமறைவாகி இருந்த காரணத்தினால் அவரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேக நபர் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகி மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.