இலங்கையின் இளைஞர் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான் நிறுவனம் ஒன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பான ஐ.ஆர்.ஓ நிறுவனத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்து அமைச்சரைச் சந்தித்த போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
குறித்த கோரிக்கைக்கு, ஜப்பானிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்துள்ளதுடன், இலங்கையின் தொழில்நுட்ப திறனையும் பாராட்டி உள்ளனர்.
ஜப்பானின் ஐ.ஆர்.ஓ மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுக்கு இடையே இலங்கை இளைஞர்களை ஜப்பானில் உள்ளக தொழில் நுட்ப பயிற்சியாளர்களாக பணிபுரிய வழிநடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 டிசம்பரில், கைச்சாத்திடப்பட்டது.
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம்.ஹில்மி, பொது முகாமையாளர் டி.டி.பி.சேனநாயக்க, பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா மற்றும் ஐ.ஆர்.ஓ வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்லத் தயாராகவுள்ள தொழிலாளர் குழுவினரும் கலந்துகொண்டனர்.