ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியபோதும் வளரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகைகளை பிரித்தானியா தொடர்ந்தும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான கட்டணங்களை நீக்குதல் மற்றும் குறைத்தல் ஆகியவை தொடரும் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பியின் கீழ் அனைத்து நாடுகளும் பிரித்தானியாவின் சலுகைகளை தொடர்ந்தும் பெறுவதற்கு தகுதியைப் பெறுவதாக பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக செயலாளார் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு இடையிலான வணிக நடவடிக்கைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பிரித்தானியாவின் நுகர்வோர் தங்களுக்கு பிடித்த சில தயாரிப்புகளை மலிவு விலையில் தொடர்ந்து பெற்றுக் கொள்ளவும் இது வழிவகுக்கும் என்று லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் குறைந்த வளர்ச்சியடைந்து வரும் 47 நாடுகள் பிரித்தானியாவின் இந்த சலுகையை தொடர்ந்தும் பெறவிருக்கின்றன.
2019ஆம் ஆண்டில் மாத்திரம், ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பியின் ஒரு பகுதியாக இருக்கும் நாடுகளில் இருந்து சுமார் 8 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆடை தயாரிப்புகளை பிரித்தானியா இறக்குமதி செய்துள்ளது.
இது பிரித்தானியாவின் ஆடை இறக்குமதியில் 30 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள காய்கறிகளை பிரித்தானியா இறக்குமதி செய்தது, இது பிரித்தானியாவின் அனைத்து காய்கறி இறக்குமதியில் 8 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.