ஊழல்களின் மூலம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தை மீளவும் நாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் மொட்டு கட்சியின் முன்னாள் தவிசாளருமான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
ஜீ. எல். பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் – ஆனால், அவ்வாறான நிபுணத்துவத்துக்கும் அவரின் கல்விக்கும் சிறிதும் பொருத்தம் இல்லாத செயல்களையே பீரிஸ் கடந்த காலத்தில் மேற்கொண்டிருந்தார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சராக இருந்து ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நியாயப்படுத்திய ஒருவர்தான் பீரிஸ்.
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடனான பேச்சுக்கு அரச தரப்பில் தலைமை தாங்கிய பீரிஸ் தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் ராஜபக்ஷக்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக மட்டுமே தனது அறிவைப் பயன்படுத்தியிருந்தார்.
அரசியலில் ஒரு புலமைமிக்க மனிதராக பீரிஸ் ஒருபோதுமே நடந்துகொண்டதில்லை.
ராஜபக்ஷக்களின் அரசியல் அணுகுமுறைகளை கொள்கை நிலைப்பாடு சார்ந்து ஆதரிக்கும் ஒருவராகவே பீரிஸ் இறுதிவரையில் இருந்தார்.
ஆனால் பொதுவாகவே உள்முரண்பாடுகளுக்குள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிக்குகின்றபோது மட்டுமே திடீரென்று தங்களை நீதிமான்களாகக் காண்பித்துக் கொள்வார்கள்.
இதற்கு பிந்தைய உதாரணம்தான் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ். இவ்வாறான புத்திஜீவிகள் தங்களின் மனச்சாட்சிக்கு அமைவாக ஒருபோதும் செயல்படுவதில்லை.
ராஜபக்ஷக்கள் மூலம் அதிகாரத்தையும் அதன் மூலமான சுகபோகங்களையும் அனுபவித்தவர்கள், ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தங்களை
சுத்தம் செய்வதற்காக அதிகம் முயற்சி செய்கின்றனர்.
ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைக்கும் குற்றச்சாட்டு அதிகம் ராஜபக்ஷ குடும்பத்தை நோக்கியதாகவே இருக்கின்றது.
அவர்களோடு அரசியல் உல்லாசத்தில் இருந்தபோது வெளிவராத கரிசனை பீரிஸ் போன்றவர்களுக்கு இப்போது எழுகின்றது.
ஒரு காலத்தில் தவறான பக்கத்தில் இருந்தவர்கள் – பின்னர் திருந்துவது தவறானதா – இவ்வாறானதொரு கேள்வி எழலாம் – அது தவறல்ல.
தங்கள் தவறுகளை சரிசெய்து கொள்ள ஒருவர் அல்லது ஒரு கட்சி முயற்சிக்குமாயின் – நாம் அதனை வரவேற்கத்தான் வேண்டும்.
ஆனால், அவ்வாறனவர்கள்- தாங்கள் தவறு செய்திருக்கின்றோம் என்பதை முதலில் பகிரங்கமாக மக்கள் முன்னால் வெளிப்படுத்த வேண்டும்.
தங்களின் தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு அதற்கான பிராயச்சித்தங்களில் ஈடுபடலாம்.
ஆனால், இலங்கையின் அரசியலில் பொறுப்புக்கூறும் நாகரிகம் சிறிதளவுகூட வளர்ச்சியடையவில்லை.
இது தமிழ் அரசியல் சூழலுக்கும் பொருந்தாது என்று வாதிட முடியாது.
அரசியலில் ஒரு விடயத்தில் தவறு இழைத்தால் அல்லது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது போனால் அல்லது அணுகுமுறைகள் தோல்வியடைந்தால்
அதற்கான பொறுப்பை குறித்த அரசியல் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மேற்குலக நாடுகளில் இந்த பண்பை தெளிவாகக் காணலாம்.
சிங்கள அரசியல்வாதிகளை விடுவோம் – தமிழ் அரசியல் தலைவர்களாவது வாக்களித்த மக்களுக்கு பொறுப்பு சொல்லும் நல்ல அரசியல் பண்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
தோல்வியடைந்தால் அடுத்தவருக்கு வழிவிட்டு ஒதுங்கும் பண்பை பழக வேண்டும்.