ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’

0
164

தென்னிந்திய திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘விமானம்’ எனும் திரைப்படத்தின்  வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சிவபிரசாத் யானலா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் விமானம். இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின்,’நான் கடவுள்’ ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். 

விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடி படைப்பாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும்  தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியிடப்பட்டிருக்கும் காணொளி.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர் வரும் ஜுன் மாதம் 9 ஆம திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘விமானம்’ என தலைப்பிடப்பட்டிருப்பதாலும், விமானப்பயணம் பற்றிய குழந்தையின் கனவைப் பற்றி படம் பேசுவதாலும், இந்த படம் ‘சூரரைப் போற்று’ படத்தைப் போல் தரமான படைப்பாக இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.