பொதுவாக மார்ச் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் ஜெனிவா என்னும் சொல் ஈழத் தமிழர் அரசியலில் முகம் காண்பிப்பதுண்டு.ஜெனிவாவை ஓர் இராஜதந்திர மேடையாகப் பயன்படுத்துவதாகவே கடந்த பதினைந்து வருடங்களாக தமிழ் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளாகத் தங்களை அடையாளப்படுத்துபவர்களும் கூறி வந்திருக்கின்றனர். வெளிநாட்டு கொடை நிறுவனங்களின் நிதியில் மனித உரிமைகள், நிலைமாறுகால நீதி என்னும் பெயரில் இலவச சுற்றுலா சென்றவர்களும் அதிகம். ஆனால், கடந்த பதினைந்து வருடங்களில் ஜெனிவா என்னும் மேடையைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட நன்மைகள் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெனிவாவில் பிரேரணைகள் முன்வைக்கப்படுவதும் – அது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெறுவதும் – ஆனால், அரசாங்கமோ வழமைபோல் வெளிநாட்டு தலையீடுகளை அனுமதிக்க முடியாது என்று கூறுவதாகவுமே இந்த நிலைமை தொடர்கிறது. அரசாங்கம், ஜெனிவாவை இலகுவில் கையாளக்கூடிய ஒரு மேடையாகவே கருதுகிறது. அரசாங்கம் அவ்வாறு கருதுவதற்கு ஏற்றவாறுதான் சர்வதேச அரசியல் சூழலும் இருக்கிறது.
2012இல் அப்போதைய ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகமே இலங்கையின் பொறுப்புக்கூறலை ஜெனிவா மயப்படுத்தியது. அப்போது, அமெரிக்க இராஜாங்கச் செயலாக இருந்த ஹிலாரி கிளின்ரன் இலங்கைமீதான பொறுப்புக்கூறல் பிரேரணையில் பிரத்தியேக ஈடுபாட்டைக் காண்பித்திருந்தார். இதற்கு ஒரு காரணம் இருந்தது. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதில் அப்போதைய அமெரிக்க நிர்வாகம் ஆர்வம் காண்பித்திருந்தது. ராஜபக்ஷவின் சீன சார்பே இதற்கான அடிப்படையான காரணம்.
ஒருவேளை, ராஜபக்ஷக்கள் சீன சார்புக்குள் விழாது போயிருந்தால் அமெரிக்காவின் அணுகு முறையும் வேறு விதமாக இருந்திருக்கலாம். இவ்வாறானதொரு பின்னணியில்தான் 2015இல் ஆட்சி மாற்ற மொன்று ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்துக்கு ஒரு நிரந்தரமான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் அமெரிக்கா ஆர்வம் காண்பித்தது. அமெரிக்காவின் ஆசிய மையக் கொள்கையின் ஓர் அங்கமாகவே அது இடம்பெற்றிருந்தது. ஹிலாரியின் பார்வையில், அமெரிக்காவின் தலைமைத்துவத்துக்காக ஆசியா ஏங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் முன்னணி சிந்தனைக்கூடமான ஈஸ்ட் – வெஸ்ட் நிலையத்தில் ‘அமெரிக்காவின் பசுபிக் நூற்றாண்டு’ என்னும் தலைப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்படி கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின் புலத்தில்தான் இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தை ஜெனிவா மயப்படுத்தும் விடயத்துக்கு அமெரிக்கா தலைமை தாங்கியது. ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், இராஜாங்கச் செயலராக இருந்த ஜோன் ஹெரி கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார். மேற்குலகு சார்பான ரணில் – மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவால் முன்கொண்டுவரப்பட்ட பொறுப்புக்கூறல் விடயத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கைக்கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால், அரசாங்கம் குறிப்பிட்டவாறு விடயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேவேளை மேற்குலகு சார்பான ஆட்சியையும் தொடர முடியவில்லை. ஆட்சி மாற்றத்தின் மீதான அமெரிக்க அணுகுமுறை தோல்வியடைந்தது என்றே கூறலாம்.
இன்றைய நிலைமையோ இன்னும் சிக்கலடைந்திருக்கிறது. தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் உள்நாட்டு பொறிமுறையையே ஜெனிவாவில் வலியுறுத்தியிருக்கிறது. உலக அரசியல் நிலைமைகளில் இலங்கையின் மனித உரிமைகள்மீது அதிக ஆர்வம் காண்பிப்பதற்கு இப்போது எவரும் இல்லை. உதட்டளவு அழுத்தமாகவே
ஜெனிவாவின் கருத்துகள் இருக்கப்போகின்றன. ஒரு வகையில் ஜெனிவா மேடைதான் ‘மெல்லுவதற்கு அவல் கிடைத்த கதைபோல்…’ இலங்கை விடயம் உச்சரிக்கப்படும். ஆனால், அதனை பயன்படுத்தி ஈழத் தமிழர் அரசியலை முன்னகர்த்த முடியாது. ஈழத் தமிழர் தங்களுக்கான மேடை எங்குள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.