25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜெனிவா அரங்கு – தமிழ் தலைமைகள் என்ன செய்யப்போகின்றன? –

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை விவகாரம் மீண்டும் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் ராஜபக்சக்கள் மீளவும் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்ற நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் சார் விவகாரமும் மீளவும் பேசுபொருளாகியிருக்கின்றது. இலங்கையின் இறுதி யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, யுத்தம் முடிவுற்ற அதே மே மாத இறுதியில் இலங்கை அரசாங்கத்தை பாராட்டி ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அப்போது 29 நாடுகள் அந்த பாராட்டும் தீர்மானத்தை ஆதரித்திருந்தன. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் அவ்வாறு பாராட்டுத் தெரிவித்த நாடுகளில் பல, இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்னும் நிலைப்பாட்டை ஆதரித்தன. இந்த பின்புலத்தில்தான் 2012இல் அமெரிக்க அனுசரனையுடன் கொண்டுவரப்பட்ட பொறுப்புக் கூறல் தொடர்பான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க பிரேரணைகளும் தொடர்ந்தன. ஆனாலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இறங்கிவரவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் ஜக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பயணிக்கும் முடிவை எடுத்ததுடன், 2015இல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொண்டது. இதுவே 30/1 தீர்மானமாகும். இதன் மூலம் அதுவரை அழுத்தங்களாக தொடர்ந்த நிலைமையை புதிய அரசாங்கம் தனது பொறுப்பாக மாற்றிக்கொண்டது. ஆனாலும் அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு விடயங்களை கையாளவில்லை.

இந்த நிலையில்தான் 2017 மார்ச்சில் ரணில் அரசாங்கம் காலத்தை நீடிப்புச் செய்யும் கோரிக்கையை முன்வைத்தது. அதாவது, 30/1 தீர்மானத்திற்கு அமைவாக பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன எனவே அதனை மேலும் முன்கொண்டு செல்வதற்கு எங்களுக்கு கால அவகாசம் தேவை. இதற்கு வேறு என்ன சொற்களை பயன்படுத்தினாலும் கூட, இதன் பொருள் கால அவகாசம்தான். இதனை அப்போது பலரும் எதிர்த்திருந்தனர். ஆயினும் பிரதான தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசம் வழங்கும் அரசாங்கத்தின் கோரிக்கையை ஆதரித்திருந்தது. ஆனால் அப்போது கூட்டமைப்பின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடிய அரசியல் சூழ்நிலை இருந்தது உண்மை. ஏனெனில் விடயங்களை முன்நோக்கி கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம் எங்களுக்கு உதவுகள் என்று அரசாங்கம் கூறும் போது, நிச்சயம் ஜக்கிய நாடுகள் சபை அதற்கு எதிராக செல்ல முடியாது. அதேவேளை புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவரும் முயற்சியில் இருப்பதாக கூறிக்கொண்டிருந்த கூட்டமைப்பாலும் அதனை எதிர்க்க முடியாதிருந்தது. உண்மையில் கூட்டமைப்பு இந்த இடத்தில் கொள்கைநிலைப்பாடு ஒன்றை எடுத்து, பொறுப்பை சர்வதேசத்திடமும் அரசாங்கத்திடமும் விட்டுவிட்டு வெளியேறிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.

ஆனால் தற்போது நிலைமைகள் முற்றிலும் வேறானவை. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், ராஜபக்சக்களின் புதிய அரசாங்கம் எதிர்பார்த்தது போன்றே, ரணில்-மைத்திரி அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு முரணானது என்றும் புதிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இந்த பின்புலத்தில்தான், எதிர்வரும் மார்ச் மாதம் 30/1 தீர்மானத்திற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முற்றுப்பெறுகின்றது. இவ்வாறு பிரேரணையை அமுல்படுத்துவதற்கான கால அவகாசம் முடிவுறும் போது, அந்தப் பிரேரணைக்கு பொறுப்புச் சொல்லுவதற்கான கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் முற்றிலுமாக விலகியிருக்கின்றது.

இந்த நிலைமையை ஆழமாக நோக்கினால், 2012இல் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை கொண்டுவரப்பட்ட போது காணப்பட்ட ஒரு புறநிலையையே தற்போது காணப்படுகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்க விரும்பாத அரசாங்கம் இருக்கின்ற நிலையில் மீண்டும் 30/1 தீர்மானத்தை கொண்டுவருவதால் என்ன நன்மை விளையும்? இவ்வாறான கேள்வி பல புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் காணப்படுகின்றன. வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றே புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பார்க்கின்றன. இதில் மாறுபட்ட பார்வையுள்ள புலம்பெயர் அமைப்புக்களும் இருக்கலாம் ஆனால் தாயகயத்தில் இருப்பவர்கள் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமே இந்த விடயத்தை அனைவரும் ஒன்றுபட்டு கையாளமுடியும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஜெனிவா அரங்கை கையாளுவதில் கடந்தகாலத்தில் தாயக கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் ஒரு நேர் கோட்டில் பயணித்திருக்கவில்லை நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென்று குறிப்பிடுவதில் ஒரு பிரச்சினையும் இருக்கின்றது. புலம்பெயர் தேசங்களில் தனிநாடு தொடர்பில் பேசுகின்றவர்களை இணைத்துக் கொண்டு தாயகம் பயணிக்க முடியாது. தாயக எல்லைக்குள்ளிருந்து எதனை முன்வைக்கலாமோ அதனைத்தான் முன்வைக்க முடியும். அதே வேளை தமிழர் பிரச்சினையென்று வரும்போது, தாயகத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களின் -முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவே இறுதியான முடிவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக, புலம்பெயர் அமைப்புக்கள் என்னதான் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்தாலும் இறுதியில் அவையனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிவிடுகின்றது. கடந்த பதினொரு வருடங்களில் சர்வதேச அரங்குகளை கையாளும் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகள் ஒரு கட்டத்திற்கு மேல் செல்லாமைக்கு இதுவே காரணம். இந்த அனுபவங்களின் அடிப்படையில்தான் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள முக்கியமான கலத்துரையாடலின் போது, தாயகத்திலுள்ள கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் ஏதோவொரு வகையில் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டுமென்னும் எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கின்றது.

இது தொடர்பில் தாயக பரப்பில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை. ஆனால் பிரதான தமிழ் தலைமையான கூட்டமைப்புடன் இது தொடர்பில் இணையனுசரனை நாடுகள் கலந்துரையாடியுள்ளதாகவும் 30/- தீர்மானத்தையே மீளவும் கொடுவரவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஏற்கனவே இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடியபோது அவர்கள் தங்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாதென்று கூறுகின்றனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் இது தொடர்பில் பேசியபோது – தன்னுடன் எவரும் இது தொடர்பில் பேசவில்லையென்றும் – தற்போதைய அரசாங்கம் பேரவையின் தீர்மானங்களிலிருந்து முற்றிலுமாக வெளியேறியிருக்கின்ற நிலையில், மீளவும், 30/1 தீர்மானத்தை கொண்டுவருவது பயனற்ற ஒன்று என்றும் என்னிடம் தெரிவித்தார். கூட்டமைப்பிற்குள் இது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லையென்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டிருந்தார். அதே வேளை, அமெரிக்க தூதுவர் புதியதொரு பிரேரணைக்கான வேலைகளை மேற்கொள்ளுமாறு சுமந்திரனிடம் கூறியதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது.

ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி கூட்டமைப்பின் பெயரில் ஏற்கனவே ஒரு வரைபு புலம்பெயர் அமைப்புக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் புதிய பிரேரணை ஒன்றிற்கான முன்மொழிவு இல்லையென்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பின்புலத்தில்தான் ரோல் ஓவர் பிரேரணை என்னும் சொற்பதம் தொடர்பில் பேசப்படுகின்றது. ரோல் ஓவர் பிரேரணை என்பது, ஏற்கனவே இருக்கும் ஒன்றை மாற்றங்கள் செய்யாமல் கொண்டுவருதல் என்னும் பொருளை குறிப்பதாகும். ஒரு வேளை வேண்டுமானால் ஒரு வருடகாலத்திற்குள் அமுல்படுத்த வேண்டும் என்னும் ஒரு நிபந்தனை இருக்கலாம். இங்கு விடயம் அரசாங்கம் பிரேரணையிலிருந்து வெளியேறிருக்கின்ற நிலையில் மீளவும் பழைய பிரேரணைக்கு உயிர்கொடுப்பதன் பயன் என்ன என்பதுதான்.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கிவரும் பிரித்தானிய தமிழர் பேரவை, ஒரு முன்மொழிவை தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளது பரீசீலனைக்கும் அனுப்பியிருக்கின்றது. மார்ச்சில் புதிய பிரேரணை ஒன்றை முன்வைக்க வேண்டுமென்று வாதிட்டிருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரத்தை விசாரிப்பதற்கென, பொருத்தமானதொரு சர்வதேச பொறிமுறையை உருவாக்க வேண்டுமென்னும் கோரிக்கையை தமிழர் தரப்புக்கள் வலியுறுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஜ.சி.சி.) சர்வதேச நீதிமன்றம் (ஜ.சி.ஜே) அதே வேளை சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக, மியன்மார் விடயத்தை ஒரு உதரணமாகக் கொண்டு, ஒரு சுயாதீன பொறிமுறையை உருவாக்க வேண்டுமென்னும் கோரிக்கையையும் தமிழர் தரப்புக்கள் முன்வைக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றது. அத்துடன் மீள நிகழாமை என்னும் விடயத்தின் கீழ், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஸ்டி கட்டமைப்பு – வலியுறுத்தப்பட வேண்டுமென்;றும் குறித்த அமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒரு புதிய பிரேரணையில் உள்ளடக்குமாறு வாதிடுவதற்கான தார்மீக உரித்து தமிழர் தலைமைகளுக்குண்டு. ஒரு வேளை அதனை இணையனுசரனை நாடுகள் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம் அல்லது சில விடயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பொன்று தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் உரித்துடையது என்பதை எவருமே மறுதலிக்க முடியாது. ஆனால் இந்த விடயங்களை தமிழர் தரப்புக்கள் வலியுறுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களுக்கான நியாயமானதொரு தீர்வை இலங்கையின் ஆள்புல எல்லைக்குள் அடைய முடியாதென்று நம்பும் அனைத்து தரப்புக்களும் ஒரு கருத்தைதொருமைப்பாட்டிற்கு வரவேண்டும். அந்த கருத்தொற்றுமை இடம்பெற்றால் மட்டும்தான் இது சாத்தியப்படும். ஆனால் இது ஒரு கடினமான பணியல்ல. மனமுண்டானால் இடமுண்டு. ஆனால் இதில் ஒரு சிலவற்றை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றுக்கொண்டு ஏனையவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விட்டால், அல்லது விக்கினேஸ்வரன் சிலவற்றை ஏற்றுக்கொண்டு ஏனையவர்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இந்த முயற்சியில் பயனில்லை. அனைவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும். அது எவ்வாறான கோரிக்கைகளாக இருந்தாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய சகல கட்சிகளும், இந்த விடயத்தில் ஓரணியில் நிற்க வேண்டும். தமிழர் ஒரு தேசம் என்பது உண்மையாயின் வெளிவிவகாரங்களை கையாளுவதில் ஒரு தேசமாக முடிவெடுக்க வேண்டும். ஒரு வேளை இந்த விடயங்களுக்கு மாறாக ஒரு பிரேரணையை கட்சிகள் முன்வைக்க விரும்பினாலும் கூட, அதனை, அனைவருமாக இணைந்து முன்வைக்க வேண்டியது அவசியம். அதில் புலம்பெயர் அமைப்புக்களும் கைகோர்க்க வேண்டும். புலம்பெயர் அமைப்புக்களும் ஏட்டிக்கு போட்டியாக கடைகளை திறப்பதால் எந்தவொரு பயனுமில்லை. இந்தக் கடைகளால் கடந்த பதினொரு வருடங்களில் எந்தவொரு நன்மையும் ஏற்படவில்லை. ஜனநாயக தளத்தில் பல்வேறு அமைப்புக்கள் இருப்பது ஆரோக்கியமானதுதான் ஆனால் குறிப்பிட்ட விடயங்களில் புரிந்துணர்வுடன் பயணிக்காதுவிட்டால், அவ்வாறான அமைப்புக்களால் பயனில்லாது போகும்

யதீந்திரா

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles