-அலசுவது இராஜதந்திரி-
ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கை அரசு ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகியதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் தனது தொடர்புகளை துண்டித்துக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இலங்கை கதவுகளை மூடிவிட்டுள்ளது என்று தனது வார்த்தையில் மிச்சேல் பச்லேட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கும் ஐ.நா மனித உரிமைப்பேரவைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஷஇலவு காத்த கிளி’களாக பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
இலங்கை அரசின் இத்தகைய நிலைப்பாட்டுக்கு பிரேரணை கொண்டுவரப்பட்ட காலத்தில் வடக்கு-கிழக்கில் தமிழ் பேசும் மக்களை ஜெனிவாவில் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் அரசியல் வாதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றனர் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.
இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் வடக்கு-கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் எவ்வித பயன்களையும் பெற்றுத்தராத நிலையில் சர்வதேச அணுகுமுறைகளே தமக்கு விமோசனத்தை பெற்றுத்தரும் என்று வடக்கு-கிழக்கு மக்கள் எதிர்பார்திருந்தனர்.
ஆனால் ஐ.நா மனித உரிமைப்பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லேட் ஐ.நா.மனித உரிமைப்பேரவை தொடர்பாக தனது கதவுகளை மூடிக்கொண்டு விட்டது எனக்குறிப்பிட்டிருப்பதன் மூலம் சர்வதேச சமூகமும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்த நிலையில் செய்வதறியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
கடும் போக்கு
இலங்கையின் இன்றைய அரசு சர்வதேச சமூகம் குறித்து ஒரு கடும் போக்கான நிலையையே கொண்டிருக்கின்றது. இத்தகைய தன்மை யுத்தம் மூடிவுக்கு வந்த காலம் முதல் இருந்து வருவதையே அவதானிக்க முடிகின்றது.
இருந்தபோதிலும் வடக்கு-கிழக்கு மக்கள் 2015-ம் ஆண்டில் தமது பேராதரவை வழங்கி ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கம் மூலமாக தமக்கு ஏற்பட்ட ஷயுத்த வடுக்களை’ நீக்கிக்கொள்ள முடியும் என்றே எதிர்பார்த்தனர்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கமும் ஜெனிவா பிரேரணையை நிறைவேற்றுவது தொடர்பில் தாமதங்களை ஏற்படுத்தியிருந்ததோடு இத்தாமதங்களுக்கு அனுசரணை வழங்குவதில் வடக்கு-கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் அரசியல் தரப்பு முக்கிய பங்காற்றியிருந்தது.
2016-ம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை யிலிருந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கமேயானால் இன்று வடக்கு-கிழக்கு மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைப்பதில் வெற்றிகண்டிருக்க முடியும்.
ஆனால் ஒருதடவையல்ல. பல்வேறு தடவைகள் தாமதங்களை ஏற்படுத்துவதில் தமிழ்தரப்பு தனது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
பின்னாட்களில் ஆட்சிக்கு வருவோர் ஜெனிவா விவகாரத்தை தட்டிக்கழிக்க முடியும் என்பதை தமிழ் தரப்பு ஒரு தூர நோக்கோடு அறிந்து கொள்ளத்தவறியிருந்தது.
ஷகாற்றுள்ளபோதே தூற்றத்தவறிய’தாகவே தமிழ் தரப்பு முன்னர் ஜெனிவா விவகாரத்தை கையாளத்தவறியிருந்தது.
இந்நிலையில் யாவரும் எதிர்பார்தது போலவே இன்றைய அரசு ஜெனிவாவுடனான தனது தொடர்பை துண்டித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
முக்கிய கேள்வி
இதன்காரணமாக சர்வதேச சமூகம் எதிர்கால்தில் எத்தகைய போக்கினைக்கையாண்டு இலங்கையை வழிக்குக்கொண்டுவர முற்படும் என்பது முக்கிய கேள்வியாகவே இருக்கின்றது.
சர்வதேச நிறுவனங்களைப்பொறுத்தவரை ஒரு முழுமையான இறையாண்மையுள்ள நாட்டின் உள்விவகாரங்களில் எல்லை மீறாத நிலையைக்கடைப்பிடிப்பவையாகவே இருக்கின்றன.
வழிகாட்டல்களை வழங்குவதொடு, ஒரு நாட்டின் அனுமதியோடு மட்டுமே அதன் உள்விவகாரங்களில் தலையிடும் போக்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் போன்ற சர்வதேச அமைப்புகள் கொண்டுள்ளதை அவதானிக்க முடியும்.
பதினொரு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட முன்னர் அன்றைய ராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு- கிழக்கில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் ஸ்தாபன தொண்டர் நிறுவனங்களை வெளியேற்றியதே முதல் நடவடிக்கையாக அமைந்திருந்தது.
எனவே சர்வதேச சமூகத்தின் நெறிப்படுத்தல்களுக்கும் , பணிப்புரைகளுக்கும் பணிந்துவிடப்போவதில்லை என்ற செய்தியை இன்றைய ஆட்சியாளர்கள் வழங்கியுள்ள நிலையில் சர்வதச சமூகம் மட்டுமல்ல.
வடக்கு-கிழக்கின் தமிழ் தரப்பும் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசை எவ்வாறு வழிக்குக்கொண்டுவரப்போகின்றன என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது.